பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து மரத்தேர் என்று சொல்லக்கூடிய தேர்களில் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து இழுத்து நான்கு மாட வீதியில் உலா வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனை பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதியில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.