மத்திய தொழில் வணிகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று காணொளி மூலம் தொழில் வர்த்தக சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆய்வு நடத்தினார். முடக்கநிலை அமல் செய்யப்பட்ட பிறகு இந்தச் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் அமைச்சர் இதுபோல ஆய்வு நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். கோவிட் -19 முடக்கநிலை அமலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதன் தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது பற்றி மதிப்பீடு செய்யவும், பொருளாதாரத்தை மீண்டும் நிலைப்படுத்துவதற்கு அவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் தொழில், வர்த்தகத்துறை இணை அமைச்சர்கள் திரு சோம் பர்காஷ், திரு எச்.எஸ். பூரி, துறையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். CII, FICCI, ASSOCHAM, NASSCOM, PHDCI, CAIT, FISME, லகு உத்யோக் பாரதி, SIAM, ACMA, IMTMA, SICCI, FAMT, ICC மற்றும் IEEMA ஆகிய தொழில் வர்த்தக சங்கத்தினர் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய திரு கோயல், நாம் தேர்வு செய்வதைப் பொருத்துத்தான் எதிர்காலம் இருக்கும் என்று கூறினார். கோவிட் தாக்கம் முடிந்த பிறகு உருவாகும் சூழ்நிலையை சந்திக்க, நல்ல திட்ட யோசனைகள், உறுதியான அமலாக்கத் திட்டங்களுடன் தயாராக இருந்து, பணிகளைத் தொடங்கி இந்தியாவை உலகின் வல்லமையான நாடாக ஆக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். ‘Jaan Bhi, jahan bhi’ என்ற பிரதமரின் சொல்லாடல் பற்றிக் குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தின் மிக மோசமான காலகட்டம் முடிந்துவிட்டது என்று கூறினார். நிலைமைகள் சீரடையத் தொடங்கியுள்ளன. மீட்டுருவாக்கம் நடைபெற்று வருகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால், பொருளாதாரச் சவாலை இந்த தேசம் சந்திக்க முடியும் என்று அவர் கூறினார்.
உள்நாட்டினரை மட்டும் கருத்தில் கொண்டதாகவோ, வெளிநாட்டினருக்கு எதிரானதாகவோ தற்சார்பு இந்தியா திட்டம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக, அனைத்துப் பகுதிகளின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை உருவாக்குவதாக, தற்சார்பு நிலையை உருவாக்குவதற்கான கோட்பாடாக இது இருக்கும் என்றார் அவர். தாராளமயமாக்கலின் முப்பது ஆண்டு காலங்களில் நாடு முன்னேறியுள்ளது, ஆனால் நகர்ப்புறங்களில் தான் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஊரகப்பகுதிகள், பின்தங்கிய பகுதிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால்,
அங்கிருந்து பல கோடி பேர் வேலைகள் தேடி நகரங்களுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது என்றார் அவர். தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்தியா முழுக்க 130 கோடி மக்களும் ஒரே மாதிரி உணர்வைப் பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். இந்திய நிறுவனங்களுக்கு அது உதவி செய்யும். சாதாரண பயன்பாட்டில் உள்ள டேபிள், நாற்காலி போன்ற பொருள்கள், பொம்மைகள், விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்களை கூட நாம் இறக்குமதி செய்வது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் தொழில்நுட்ப அறிவும், தொழில்திறன் படைத்தவர்களும் உள்ள நிலையிலும் இதுபோன்ற நிலைமை உள்ளது என்று கூறிய அவர், இவையெல்லாம் மாற வேண்டும் என்று கூறினார்.