ஏழை எளிய மக்கள் தினக்கூலி வேலை செய்பவர்கள் வயிறார தாமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தோடு 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அம்மா உணவகங்களைத் தொடங்கினார். தமிழகத்தின் தலைநகரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது 407 அம்மா உணவகங்கள் ஏழை மக்களின் பசியாற்றும் அட்சயப்பாத்திரமாக செயல்பட்டு வந்தது. உலகநாடுகளே இந்த திட்டத்தை வியந்து பாராட்ட, இந்திய மாநிலங்கள் பலவும் தமிழகம் வந்து இந்த திட்டம் குறித்து அறிந்து சென்று தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தின.
திமுக ஆட்சி வந்த பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஏழை மக்களை எல்லாம் மனதில் கொள்ளாமல், அம்மா உணவகத்தை முடக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதன் முதல் கல்லாக முகப்பேரில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து சூறையாடினர். மழைநீர் வடிகால்வாய் அகலப்படுத்த இடையூறாக இருப்பதாகக் கூறி கே. கே. நகர் பி.வி.ரமணா சாலையில் இயங்கிய அம்மா உணவகம் அகற்றப்பட்டது. இதேபோல கே.கே.நகர், இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே இருந்த அம்மா உணவகம், கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் கிங் மருத்துவமனை நுழைவாயில் அருகே செயல்பட்ட அம்மா உணவகம், தியாகராயா சாலையில் இயங்கி வந்த அம்மா உணவகம் என கடந்த 2 ஆண்டுகளில் மட்டும்14 அம்மா உணவகங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று வேளையும் பல்வேறு உணவுகள் பரிமாறப்பட்ட நிலையில், தற்போது காலையில் இட்லி சாம்பார், மதியம் சாம்பார் சாதம் மட்டும் பரிமாறப்படுவது, இரவில் தரமற்ற சப்பாத்தி தருவது என அம்மா உணவகம் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை இந்த அரசு திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த அம்மா உணவகங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அம்மா என்ற பெயர் இருக்கிற ஒரே காரணத்தினால் முழு திட்டத்தையும் முடக்கும் நோக்கத்தோடு திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.