2024 – தேர்தலில் மூடுவிழா காணப்போகும் எதிர்க்கட்சிகள் ! அடுத்த ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தல் களம் தற்போதே சூடு பிடித்துவிட்டது! பா.ஜ.வுக்கு எதிராக பலமான கூட்டணியைஅமைக்க காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தக் கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம், பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம், பெங்களூரில் நடந்தது.
எதிர்கட்சிகளின் கூட்டத்தில் தலைமை வகித்தது காங்கிரஸ் இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆத் ஆத்மி கட்சி தலைவரான, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி உட்பட, 29 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பா.ஜ.க வுக்கு எதிராக, 29 கட்சிகளும் ஒன்றிணைந்து, ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளன. ஒன்றியம் இந்தியா என சொல்ல மறுத்த அனைத்து கட்சியினரும் இன்று இந்தியா இந்தியா என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என நெட்டிசன்கள் வச்சு செய்து வருகிறார்கள்.. இதுவே மோடிக்கு கிடைத்த முதல் வெற்றி என கூறவும் தொடங்கிவிட்டார்கள். கூட்டணிக்கு பெயர் வைத்து விட்டாலும், தங்கள் அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை.
பிரதமர் வேட்பாளரை முன்னரே அறிவித்தால், கூட்டணிக்குள் பிரச்னை எழும் என்பதை, காங்கிரஸ் கட்சி யூகித்திருப்பது தெளிவாக தெரிகிறது .ஏனென்றால் காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல், அவதுாறு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி., பதவியை இழந்துஉள்ளார். தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தால் மட்டுமே, வரும் தேர்தலில், அவர் போட்டியிட முடியும். இல்லையெனில், பிரசாரம் மட்டுமே செய்ய முடியும்.
கூட்டணி விஷயத்தில் பிரதமர் மோடி நேரடியாக இறங்கினார். எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை சமீபத்தில் கூட்டி விவாதித்துள்ளார்.இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவினர், அம்மாநில துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான, தேசியவாத காங்., அணியினர் உட்பட, 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற, 29 கட்சிகளுக்கும், தற்போது, லோக்சபாவில், 150 எம்.பி.,க்கள் உள்ளனர். பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ள எம்.பி.,க்கள் பலத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை பாதிக்கும் குறைவே.
இந்தக் கட்சிக்கும், மம்தாவின் திரிணமுல் காங்., கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மேலும், பா.ஜ.,வை எதிர்ப்பதில் முனைப்பு காட்டும், மாநில கட்சிகளுக்கும் சில சொந்த பிரச்னைகளும், அரசியல் நிர்பந்தங்களும் உள்ளன. அதனால் தான், காங்கிரசுடன் அணி சேர்ந்துள்ளன.
‘யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் முக்கியம்’ என்று முழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின்; ‘பதவி மீது ஆசை இல்லை’ என்று கூறியபடியே, பதவிக்காகவே எதிர்க்கட்சிகளின், ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்துள்ள மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்; இந்த கூட்டணி வெற்றி பெற்றால் தன் மகனுக்கு மந்திரி பதவி வாங்கும், ‘கொள்கை’ப் பிடிப்போடு களம் இறங்கியுள்ள, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ…
பா.ஜ.,வின் ஸனாதனத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ரட்சகராக தன்னை நினைத்துக் கொண்டுள்ள திருமாவளவன், நிதீஷ்குமார், சரத் பவார் உள்ளிட்ட, 26 கட்சிகளின் கைகோர்ப்பு தான், ‘இந்தியா’ கூட்டணி. மோடியின் மதச்சார்பு அரசை எதிர்த்து, ஜனநாயகத்தை பாரதத்தில் நிலைநாட்ட அவதாரம் செய்துள்ளதாம், இந்த கூட்டணி.
அதேநேரத்தில், இந்த கூட்டணியின் தலைவர்களுக்குள் கிஞ்சிற்றும் ஒற்றுமை கிடையாது. ஒரு பொது காரியத்திற்காக சுயநலத்தோடு இணைந்துள்ளனர்… அவ்வளவு தான். ஸனாதன எதிர்ப்பு, ஜனநாயக மீட்பு என்றெல்லாம் கதை விடும் இந்த தலைவர்கள், ‘ஊழலை எதிர்ப்போம்’ என, மருந்துக்கு கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை; காரணம், எல்லாருமே ஊழலில் ஊறிய மட்டைகள்.
ஜனநாயகத்தை காக்கவே கூட்டணி என்றால், வைகோ எதற்கு, மகனுக்கு பதவி பெற துண்டு போடுகிறார். கோஷ்டி பிரிந்து குடுமிப்பிடி சண்டை போடுவதில் அசகாய சூரர்களான காங்கிரசார், தங்களின் சொந்த தேவைக்காக, ஆம் ஆத்மி உடனான கருத்து வேறுபாட்டை மறந்து, மறைத்து கூட்டணியில் சேர்ந்துள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி கேட்கவே வேண்டாம். தங்களின் கொள்கைகளை காவு கொடுத்து கட்சியை நடத்தி வருகிறார்கள். இப்படி உறுதியான குறிக்கோள் எதுவும் இல்லாது, வெறுமனே மோடியை எதிர்க்க வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் வைத்து, தேர்தல்களம் காணப் போகிறது எதிர்க்கட்சிகளின் நவக்கிரக கூட்டணி.
தேர்தல் என்ற தேரை இழுக்கும் இவர்கள், ஒவ்வொருவரும் வேறு வேறு பக்கமாய் இழுக்கின்றனர்; தேர் நகருமா, கவிழுமா என்றே தெரியவில்லை. உப்பு சப்பு இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஒன்று தேர்தலில் தோற்கும்; இல்லையெனில், ஜெயித்த பின் தானே மூடுவிழா காணும். முயலின் மீது வேல் எறிந்து பெறும் வெற்றியை விட, யானையை குறி பார்த்து குறி தவறிய வேல் பெருமைக்கு உரியதே. அந்த வகையில், மோடியுடன் மோதி தோற்றாலும், ‘இந்தியா’ கூட்டணிக்கு பெருமை தான்.