திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுமார் 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச்செயலாளர் உட்பட இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கொடைக்கானலில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்த கணேசன், நில உரிமையாளர்கள் உயிரிழந்ததுடன், விசிக பிரமுகர்களுடன் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 35, இவர் அதே பகுதியை சேர்ந்த மெரினா என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்.
வசந்தா என்பவரிடம் மெரினா 4 ஏக்கர் நிலத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியுள்ளார். நிலத்திற்கான தொகையில் ஒரு பகுதுயைக் கொடுத்த மெரினா மீதிப் பணத்தைத் தரவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மெரினாவும் அவரது கணவரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இருவரும் உயிரிழந்த நிலையில், மெரினா தம்பதி தனக்கு இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி கணேசன், அவர்கள் வாங்கிய நிலத்தை சொந்தம் கொண்டாட தொடங்கியுள்ளார்.
ஆனால் நிலத்தை விற்ற வசந்தா, மெரினா தனக்கு மீதி தொகையை தரவில்லை எனக்கூறி நிலத்திற்கு உரிமை கோரினார். இந்த சூழலில் கணேசன் கொடைக்கானலில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் நகரச்செயலாளர் இன்பராஜ், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து வசந்தாவுடன் தகராறு செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 23ம் தேதி கணேசன், இன்பராஜ் உள்ளிட்ட விசிகவினர் அந்த நிலத்திற்கு உரிமைக்கோரி கட்சியின் கொடிக்கம்பத்தை ஊன்றி அட்டூழியம் செய்துள்ளனர்.
மேலும், வசந்தா மற்றும் அவரது தம்பி கனகராஜை மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் விசிகவினர் பேசியது மட்டுமின்றி தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருவரும் புகார் அளித்ததை தொடர்ந்து ஆயுதங்களால் தாக்குதல், மிரட்டுதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விசிக பிரமுகர் இன்பராஜ், கணேசன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, News 18 Tamilnadu