அமெரிக்காவில் கடந்த 70 ஆண்டுகளில், 451 கத்தோலிக்க பாதிரியார்கள், 1990க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில், கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை உள்ளது. மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதத்தினர் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெரும்பாலானோர் இந்த திருச்சபைக்கு கீழ் செயல்படும் தேவாலயங்களுக்கு செல்வது வழக்கம்.
இங்கு, குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இது குறித்து மாகாண சட்ட மையம், 2018ல் விசாரணை துவங்கியது. இந்த மையத்தின் தலைவர் அட்டர்னி ஜெனரல் குவாம் ரவுல், திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள், ஊழியர்கள் உட்பட 600 பேரிடம் ரகசியவிசாரணை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கத்தோலிக்க திருச்சபையை தலைமையாகக் கொண்டு மாகாணம் முழுதும் 949 தேவாலயங்கள் செயல்படுகின்றன. இங்கு 2,215 பாதிரியார்கள் பணியாற்றுகின்றனர். இந்த திருச்சபையின் கீழ் வரும் தேவாலயங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாக புகார் எழுவதும், பின் அது காணாமல் போவதும் வாடிக்கையானஒன்றாகும்.
இந்நிலையில் 1950 முதல் 2019 வரை, திருச்சபையில் இருந்த 451 பாதிரியார்களால், 1,990 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளனர். இது, மிகவும் கொடூரமான செயலாகும். இது தொடர்பாக பல முறை புகார்கள் ஏற்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியுள்ளனர்.
மத ரீதியான ஆலோசனைக்கு வந்த சிறுவர், சிறுமிகளை பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களை அவர்கள் மிரட்டி உள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பெற்றோர்களும் மிரட்டப்பட்டுள்ளனர். இது பற்றிய புகார்கள் வந்த போது திருச்சபை நிர்வாகம் அனைத்து தவறுகளையும் மூடி மறைத்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டர்களில் பலர் இறந்துவிட்டனர். உயிருடன் இருப்பவர்கள், இனியும் தண்டிக்கப்படுவார்களா என்பது சந்தேகம்தான். இருப்பினும், திருச்சபையின் பெயரில் பாலியல் பலாத்காரம் செய்து, அப்பாவி குழந்தைகளை சிதைத்தவர்களை வெளிச்சம் போட்டு காட்டவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது-. இது குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















