ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
2023 – 2025
மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் ராசியினர் யோகம் அடைவார்கள்
நிகழும் சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் தேதி (8.10.2023) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ண பட்சம், தசமி திதி, பூசம் நட்சத்திரம், சிவ யோகம், கரசை கரணம், நேத்திரமும் ஜீவனமும் கொண்ட சித்த யோகத்தில், புத பகவானின் ஹோரையில், பாரம்பரிய பஞ்சாங்கமான வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பகல் 3.40 மணியளவில் ரேவதி நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் உபய ஸ்தானமான மீன ராசிக்குள் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 3 ஆம் பாதத்தில் உபய ஸ்தானமான கன்னி ராசிக்குள் கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 31.10.2023 அன்றுதான் ராகு – கேது பெயர்ச்சி ஆகும்
கிரகங்களில் மிக அதிகபட்சமான வலிமை கொண்டவர்கள் ராகுவும் கேதுவும். மற்ற கிரகங்களுக்கு இருப்பதுபோல் இவர்களுக்கென்று சொந்த வீடுகள் இல்லை என்றாலும், எந்த ராசிக்குள் இவர்கள் சஞ்சரிக்கின்றார்களோ அந்த ராசி நாதனுக்குரிய பலம் இவர்களுக்கு உண்டாகி, அந்த ராசிநாதன் போலவே பலன்களை வழங்கிடக் கூடியவர்களாக மாறிவிடுவர். நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் எந்த கிரகத்தோடு சேர்கிறார்களோ, எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்கிறார்களோ, எந்தெந்த கிரகங்களால் பார்க்கப்படுகிறார்களோ அதற்கேற்றார் போல் அவர்களுடைய தன்மைகளும் மாறுபடும் என்றாலும், இவர்களுக்குள்ள காரகத்துவத்தின்படி இவர்கள் வழங்க வேண்டிய பலன்களை வழங்குவதில் இவர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம்.
ராகு பகவான் யோகத்தையும் போகத்தையும் அளவற்று வழங்கிடக் கூடியவர், அதை நோக்கி கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு செல்ல வைப்பவர், உல்லாச வாழ்க்கையையும் சுகபோகங்களையும் அடைய வைப்பவர், பெரும் பதவியில் அமர வைப்பவர், செல்வாக்கினை அடைய செய்பவர், கடல் கடந்து செல்லக்கூடிய நிலையினை உண்டாக்குபவர், அரசியல் செல்வாக்கையும் ஆட்சி பலத்தையும் வழங்கிடக் கூடியவர். அதிகாரம் அந்தஸ்தை வழங்கிடக்கூடியவர். பொருள் வளத்தை உண்டாக்கிடக் கூடியவர். சட்டத்திற்கு புறம்பான, ஒழுக்கத்திற்கு மாறான, பண்பாட்டிற்கு எதிரான நிழல் காரியங்களில் ஈடுபட வைப்பவர். தந்தை வழி பாட்டனார், பாட்டி, அந்நிய மதத்தினரின் சகவாசம், அந்நிய இனத்தவர்களின் நட்பு, நீச்சர் என்று கூறப்படுவோரின் உறவு, தீய செயல்களைச் செய்பவர்கள், திருட்டுத் தொழில் புரிந்து வாழ்பவர்கள், சாகச செயல்கள் புரிபவர்கள் ஆகியோருக்கும் ராகுவே காரகம் ஆவார். தொழிற் கூடங்கள், குலதர்மத்திற்கு மாற்றாக செய்யும் தொழில்கள், அயல்நாட்டு தொடர்புகள் ஆகியவற்றுக்கும், அனைத்து வகையான யோகத்திற்கும், பலவிதமான சுக போகத்திற்கும் காமக் களியாட்டத்திற்கும், நவீன பொருட்களுக்கும், நீரினால் உண்டாகும் கண்டத்திற்கும், விஷ பாதிப்புகள், அங்க குறைபாடுகள், குடல் ரோகம், தம் தகுதிக்கும் குறைவானவர்களுடன் சேர்க்கை, சோம்பல் ஆகியவற்றுக்கும் ராகுவே காரகம் ஆகிறார். கப்பல், திரைப்படம், ரேடியோ, கடிகாரம் ஆகியவற்றுக்கும், கிழமைகளில் சனிக்கிழமையும், நிறங்களில் கருப்பும், நவதானியத்தில் உளுந்தும், உலோகத்தில் கருங்கல்லும், எண்களில் 4 ம், திசைகளில் தென்மேற்கும், நவரத்தினங்களில் கோமேதகமும் ராகுவுக்குரியவையாக கூறப்படுகின்றன.
கேது பகவான் ஞானமோட்ச காரகர், பாப விமோசனத்திற்கு அதிபதியானவர், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பவர், விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் காரகம் ஆனவர். சங்கடங்களை அளித்து ஞானத்தை உண்டாக்கி நன்மைகளை வழங்கிடக் கூடியவர். நீதி நேர்மை நியாயத்தின்படி மனிதர்களை நடத்தி செல்பவர், ஆன்மீக ஈடுபாட்டினை உண்டாக்குபவர். ஞானத்தினை ஏற்படுத்துபவர். உலகையும் சுற்றத்தையும் புரிய வைப்பவர். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கிடக் கூடியவர். தாய் வழி பாட்டன், பாட்டி, அந்நிய மதத்தினர், அந்நிய இனத்தவர்கள், இழிவான தொழில் செய்பவர்கள், வாழ்வதற்காக இடம் விட்டு இடம் மாறி செல்பவர்கள் போன்றவற்றுக்கும், ரசாயனம், கெமிக்கல், மந்திரம், மாந்திரீகம் போன்றவற்றுக்கும், தோல் பதனிடும் தொழில், ஆன்மீக ஈடுபாடுகளுக்கும் கேதுவே காரகமாகிறார். அயல் நாட்டிற்கு செல்லுதல், அங்கே தொழில் செய்தல், வசித்தல், விபத்து, ரண காயம், சித்த பிரமை அடைதல், உஷ்ண வியாதிகள், அரசாங்க தண்டனைகள், சிறை பயம், சிறைவாசம், விஷ நோய்கள், தோல் வியாதிகளாகிய சொறி சிரங்கு போன்றவற்றிற்கும் கேதுவே காரகமாகிறார். கிழமைகளில் செவ்வாய்க்கிழமையும், நிறங்களில் கருஞ்சிவப்பு நிறமும், நவதானியத்தில் கொள்ளும், எண்களில் 7 ம், திசைகளில் வடமேற்கும், நவரத்தினத்தில் வைடூரியமும், கேதுவிற்கு உரியவையாகும்
8.10.2023 அன்று நடைபெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சியினால் ஒன்றரை ஆண்டுகள் மீன ராசிக்குள் ராகு பகவானும், கன்னி ராசிக்குள் கேது பகவானும் சஞ்சரித்து நம் அனைவருக்கும் பலன்களை வழங்கிட உள்ளனர்.
மீன ராகு, கன்னி கேது சஞ்சாரத்தினால் 12 ராசியினருக்கும் எத்தகைய பலன்கள் உண்டாகும்? என்பதை தெரிந்து கொள்வதால் நமக்கு உண்டாகப் போகும் நன்மைகளையும் சங்கடங்களையும் நாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ முடியும். கிரகங்களில் மிகவும் குறைவாக இரண்டேகால் நாட்கள் மட்டும் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன் தரக்கூடியவர் சந்திர பகவான், அதேபோல் மிகவும் அதிகமாக இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் சஞ்சரித்து பலன் தரக்கூடியவர் சனி பகவான். அவருக்கடுத்து ஒன்றரை ஆண்டு காலம் ஒரே ராசியில் சஞ்சரித்து பலன் தரக்கூடியவர்கள் ராகு பகவானும், கேது பகவானும். இவர்கள் இருவருக்கும் வக்கிர கதி இல்லை என்பதால் அந்த ஒன்றரை ஆண்டு காலமும் நிலையான பலன்களை வழங்கிடக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
பொதுவாக ஒவ்வொருவரின் ஜென்ம ஜாதகத்திலும் அவர்களுடைய ராசிக்கு, மூன்று, ஆறு, பதினொன்றாம் வீடுகளில் ராகு, கேது பகவான் வீற்றிருந்தாலும்,சஞ்சரித்தாலும் அவர்களுக்கு யோகமான பலன்களை வழங்குவார்கள். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் ராகு பகவான் வீற்றிருந்தாலும் அந்த ஜாதகர்களுக்கு யோகமான பலன்களை வழங்குவார். இது பற்றி ஒரு பழம் பாடல்… ‘ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்திருக்க பூமேவும் ராஜயோகம் தனிதுயில் என்று புகழலாமே… என்று கூறுகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு, கேது வீற்றுள்ள நிலையை வைத்தே அந்த ஜாதகரின் வாழ்க்கையைப் பற்றி பெருமளவிற்கு நம்மால் அறிய முடியும். அந்த அளவிற்கு மற்ற ஏழு கிரங்களையும் விட வலிமையானவர்கள் ராகு, கேது என்ற ஒற்றை உடலில் தோன்றிய இரட்டையர்கள். நன்மைகள் என்றாலும் இவர்கள் அதிகபட்சமாகவே வழங்குவார்கள். சங்கடங்கள் என்றாலும் எல்லையற்று வழங்குவார்கள். இதனால்தான், ராகு, கேது பெயர்ச்சி நடைபெறும் போதெல்லாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல்வேறு திருப்பங்கள் நிகழ்கின்றன.
ராகு பகவான் சஞ்சரிக்கப் போகும் மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். மீன ராசிக்குள் உள்ள நட்சத்திரங்களான பூரட்டாதிக்கும் அதிபதி குரு பகவான்தான். உத்திரட்டாதிக்கு அதிபதி சனிபகவான். ரேவதிக்கு அதிபதி புத பகவான் ஆவார்கள்.
இந்தப் பெயர்ச்சியின் போது ராகு பகவானுக்கும், மீன ராசியின் அதிபதி, மீன ராசிக்குள் உள்ள நட்சத்திராதிபதிகள் ஆகியோருக்கும் உள்ள நிலைமைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேது பகவான் சஞ்சரிக்கப் போகும் கன்னி ராசிக்கு அதிபதி புத பகவானாவார். கன்னி ராசிக்குள் உள்ள நட்சத்திரங்களான உத்திரத்திற்கு அதிபதி சூரியன். அஸ்தத்திற்கு அதிபதி சந்திரன். சித்திரைக்கு அதிபதி செவ்வாய்.
இந்த நிலையில் கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது பகவானுக்குரிய சஞ்சாரப் பலன்களை பார்க்கும்போது, கேது பகவானுக்கும் கன்னியின் ராசியாதிபதி, கன்னிக்குள் உள்ள நட்சத்திராதிபதிகள் ஆகியோருக்கும் உள்ள நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
8.10.2023 அன்று மீனத்திற்கு பெயர்ச்சியாகும் ராகு பகவானும், கன்னிக்கு பெயர்ச்சியாகும் கேது பகவானும் 26.4.2025 வரை அங்கே சஞ்சரித்து எந்தெந்த ராசியினருக்கு நற்பலன்களை வழங்கப் போகிறார்கள்? எந்தெந்த ராசியினருக்கு சங்கடமான பலன்களை வழங்கப் போகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடையே ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் என்ற இந்நூல்.
ராகு பகவான் சஞ்சார நிலை
8.10.2023 – ரேவதி நட்சத்திரம் – மீனம் ராசி.
15.6.2024 உத்திரட்டாதி நட்சத்திரம் – மீனம் ராசி
22.2.2025 பூரட்டாதி நட்சத்திரம் – மீனம் ராசி.
கேது பகவான் சஞ்சார நிலை
8.10.2023 சித்திரை நட்சத்திரம் – கன்னி ராசி.
11.2.2024 அஸ்தம் நட்சத்திரம் – கன்னி ராசி.
19.10.2024 உத்திரம் நட்சத்திரம் – கன்னி ராசி.
உங்கள் ராசிக்குரிய பலன்களை இந்நூல் வழியே நீங்கள் தெரிந்து கொள்வதுடன், உங்களுக்கு யோகமான பலன்களை வழங்கிடக் கூடியவர்களாக ராகு, கேதுக்கள் சஞ்சரித்தாலும் சரி, சங்கடமான பலன்களை வழங்கிடக் கூடியவர்களாக சஞ்சரித்தாலும் சரி, துர்க்கையையும், விநாயகப் பெருமானையும் தொடர்ந்து வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும். ஒரு முறை காளஹஸ்திக்கோ, அல்லது திருப்பாம்புரத்திற்கோ, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்திற்கோ சென்று ராகு, கேதுக்களுக்கு பரிகாரம் செய்திட உங்கள் சங்கடங்கள் விலகும் நன்மைகள் அதிகரிக்கும்.
ஜோதிட வித்தகர்
திருக்கோவிலூர் பரணிதரன்
2/121. பெருமாள் கோயில் தெரு. மணம்பூண்டி. திருக்கோவிலூர் 605759.
விழுப்புரம் மாவட்டம்.
Cell :-9444393717 — 9940686060