தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின்வாரியத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது தொடர்பாக அவர், “திமுக அரசு மின்சாரத்தை அதிகமான விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மின்சாரம் ஒரு யூனிட் விலை 20 ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டுள்ளது. இது தற்போதைய கொள்முதல் விலையைவிட 4 மடங்கு அதிகம். திமுகவினர் கைப்படுத்தப்போகும் நிறுவனத்தின் மூலம் இந்த மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரூ.4000 கோடி முதல் ரூ.5000 கோடி வரை டெண்டர் விட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் தி.மு.கவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மக்கள் மீது நிதிச்சுமை அதிகரிப்பது மட்டுமின்றி மின்சாரத்துறைக்கும் பேரிழப்பு ஏற்படும்” குறிப்பிட்டு இருந்தார்.
இதனைத்தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலைக்கு ஒரு நாள் கெடு வைத்தார்.
கெடு வைத்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதாத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த திமுகவினருக்கும், மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அண்ணாமலை வெளியிட்ட கூடுதல் தகவல்களில், “தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் (டிடிபிஎஸ்) ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று ரூ. 29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது” என்று குறிப்பிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி 4% கமிஷன் வாங்கியதையும் அம்பலப்படுத்தினார்.
மேலும், “கோபாலபுரம் – பிஜிஆர் எனர்ஜி – மின்சார அமைச்சகம் – V. செந்தில் பாலாஜி… இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள், விடை எளிதில் புரியும்” என்று டுவிட்டரில் பதிவிட்டு திமுகவினருக்கு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனால் மேலும் அரண்டுபோன திமுக கூடாரம், என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறது.
இந்த நிலையில் அண்ணாமலை அடுத்த அஸ்திரத்தை ஸ்டாலின் அரசு மீது வீசியுள்ளார்.
“அடுத்த வாரம் சோலார் மின்சாரம் தொடர்பான முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவேன்” என்று அண்ணாமலை அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அடுத்த வாரம் அண்ணாமலை என்னென்ன ஆதாரங்களை வெளியிடப்போகிறார் என்ற கேள்விகள் இப்போதே ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டன.
எது எப்படியோ அண்ணாமலையிடம் சிக்கி திமுக சின்னாபின்னமாகப்போவது உறுதி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.