தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரி கனிமொழி எம்பியின் தொகுதியான தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரில், சாக்கடை நீரும் கலந்துள்ளதால்தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடியில் 86 இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மழைநீர் மாநகராட்சியினரால் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.பருவமழைதமிழகத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் பெய்த மழை நேற்றும் நீடித்தது. நேற்று மதியம் வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மதியத்துக்கு பிறகு மழை நின்றது. ஆனால் தொடர்ந்து மேகமூட்டமாகவே காணப்பட்டது.
இந்த மழை காரணமாக தூத்துக்குடியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதியிலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதனால் 86 இடங்களில் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றப்பட்டு வருகின்றன. அதிநவீன மோட்டார்கள் 15 இடங்களில் இயங்கி வருகின்றன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தூத்துக்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.டி காலனி 10வது தெரு முதல், 16 வரை மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாததோடு, சாக்கடை நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.