உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் கங்கா விரைவுசாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 600 கி.மீ. தொலைவுடைய இந்த நீண்ட விரைவுசாலைக்காக ரூ.36,230 கோடி செலவிடப்படுகிறது.இந்த சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவப்பிரசாத் மவுரியா மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மாஃபியாக்களை ஒழித்து உ.பி.யை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றவர் யோகிஆதித்யநாத் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உத்தரப் பிரதேசம் முழுவதுமாக வளர்ச்சியடையும் போது நாடு முன்னேறும்; எனவேதான் அரசின் கவனம் உ.பி.யின் வளர்ச்சியில் உள்ளது.உத்தரப் பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக இருந்தது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக யோகி ஆதித்யநாத் எடுத்த நடவடிக்கைகளால் மாஃபியாக்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசமும் யோகி ஆதித்யநாத்தும் சேர்த்தால் உப்யோகி U.P.Y.O.G.I. அதன் விளைவு வளர்ச்சி. ஒருகாலத்தில் மாலை மங்கினால் போதும்m மேற்கு உத்தரப் பிரதேசத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் வெடிக்கும். அந்த நிலை இப்போது மாறிவிட்டது. அந்த துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டியவர் யோகி ஆதித்யநாத்.
இன்று சட்டவிரோத சொத்துக்கள் மீது புல்டோசர்கள் ஏற்றப்பட்டு அழிக்கப்படுகின்றன. இப்போது மக்கள் நிம்மதியாகவும் மாஃபியாக்கள் வலியுடனும் இருக்கின்றனர்.சில கட்சிகளுக்கு நாட்டின் கலாச்சாரம், வளர்ச்சி பிடிக்காது. அவர்களுக்கு அவர்களுடைய வாக்குவங்கி தான் முக்கியம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், கங்கையை சுத்தப்படுத்தினாலும் கேள்வி கேட்பார்கள். எல்லையில் தீவிரவாதிகளை ஒழித்தாலும் கேள்வி கேட்பார்கள்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். அவர்களுக்கு காசி கோயிலும் பிரச்சினை, ராமர் கோயிலும் பிரச்சினை” என்றார்.
இந்த நிகழிச்சியில் மறைமுகமாக முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ்,மாயாவதி உள்ளிட்டோரை பிரதமர் குறிப்பிட்டு பேசியுள்ளதாக பாஜகவினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















