இந்தியாவில் தேசத்திற்கு எதிராகவும் ராணுவவீரர்களை இழிவுபடுத்தும் விதமாக செயல்பட்டு வந்த : 20 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்களை முடக்கியுள்ளது மத்திய அரசு. மேலும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்
உளவு அமைப்புகள் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் இணையத்தில் பொய் செய்திகளைப் பரப்புவதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க அமைச்சகம் திங்கட்கிழமை அன்று உத்தரவிட்டது.
இரண்டு தனித்தனி உத்தரவுகளின் வாயிலாக, இந்த யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை முடக்க இணையச் சேவை வழங்குநர்களை அறிவுறுத்துமாறு தொலைத்தொடர்புத் துறையை அமைச்சகம் கோரியுள்ளது.
மேற்கண்ட சேனல்கள் மற்றும் இணையதளங்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் வலையமைப்பைச் சேர்ந்தவையாகும். இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றிய போலிச் செய்திகளை இவை பரப்புகின்றன.
காஷ்மீர், இந்திய ராணுவம், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராமர் கோவில், ஜெனரல் பிபின் ராவத் போன்ற தலைப்புகளில் பிளவுபடுத்தும் உள்ளடக்கத்தை வெளியிட இந்த சேனல்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒரு சேனல் தமிழ் புலிகள் குறித்த காணொலி ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
நயா பாகிஸ்தான் குழுமத்துடன் தொடர்புடைய மற்றும் தனித்து செயல்படும் இந்த சேனல்களின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இவற்றின் காணொலிகள் 55 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன.
தமிழகத்தில் தேசத்திற்கு எதிராக பேசிய வீடியோக்களை சேகரிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. தனிநாடு கோரும் அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சையும் இணைக்குமாறு தெரிவித்துள்ளது. இது மிகவும் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருகின்றது. இந்த செய்தி வந்ததிலிருந்து தமிழகத்தில் பல சேனல்கள் பல வீடியோக்களை அழித்து வருகிறது.