ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் தயார் நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்தது..
ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கொவிட் சார்ந்த தயார் நிலையை பராமரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.கொவிட்-19 மற்றும் ஒமிக்ரான் வகை தொற்றுக்கு எதிரான தயார் நிலை குறித்து, மாநில சுகாதார செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன் ஆய்வு மேற்கொண்டார். உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கொவிட் பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும், ஆக்சிஸஜன் படுக்கைகளுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தாலும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகம், மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தினார்.மாநிலங்கள் விழிப்புடன் இருந்து தொற்று பாதிப்பை கண்காணிக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலம் வரவுள்ளதால் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்றுக்காக தற்போதுள்ள தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஒமிக்ரான் தொற்றை சமாளிக்க கீழ்கண்ட 5 அடுக்க யுக்திகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1.தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை விதிக்க வேண்டும் எனவும், பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். அங்கு வழிகாட்டுதல்கள்படி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், கொரோனா வகையை கண்டறிய, மாதிரிகளை இன்சாகாக் ஆய்வு கூடங்களுக்கு தாமதமின்றி அனுப்ப வேண்டும்.
2. அனைத்து மாவட்டங்களிலும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை தொற்றுக்களை, தினசரி அடிப்படையிலும், வார அடிப்படையிலும் தீவிரமாக கண்காணித்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச பயணிகளை கண்காணிக்க ‘ஏர் சுவிதா’ இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்.
3. ஒமிக்ரான் தொற்றுக்காக, தற்போதுள்ள தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும். 30 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்.
4. மக்களுக்கு சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தவறான தகவல்களால் பீதி ஏற்படாது. மருத்துவமனை மற்றும் பரிசோதனை வசதிகள் குறித்த நிலவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பத்திரிக்கையாளர் சந்திப்பை அடிக்கடி நடத்த வேண்டும்.
5. தகுதியான மக்களுக்கு 100 சதவீதம், கொவிட் தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்