சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகத்தில், புதிததாக அமைக்கப்பட்டுள்ள கடல்சார் பணிமனையை (Marine Workshop) மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று (23.12.2021) திறந்து வைத்தார். மேலும் கடல்சார் பல்கலைக்கழக விசாகப்பட்டினம் வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஆற்றிய உரை வருமாறு:
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், இந்த பல்கலைக்கழகத்தில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக பயின்று வருகின்றனர். இது தான் இந்தியாவின் சிறப்பு. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ கற்றுக் கொண்டுள்ளோம். இந்த சகோதர உணர்வுதான் நம்மை ஒருங்கிணைத்துள்ளது. இதுதான் மாணவர் சமுதாயத்தின் உணர்வாக உள்ளது. கல்லூரி காலம் என்பது நமது வாழ்க்கையில் முக்கிமான அங்கம். ஏனென்றால் நமது லட்சியங்களை எட்டிப் பிடிப்பதற்கு அடித்தளமாக இந்த கல்லூரி காலத்தில், நமது கடினமான முயற்சிகள் அமைகின்றது. நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும் மிகப்பெரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் ஒருமுறை கூறினார்.
‘நீ பிரகாசிக்க வேண்டும் என்றால், சூரியனை போல் கொளுந்து விட்டு எரிய தயாராக இருக்க வேண்டும். கடினமாக உழைப்பதன் மூலமாகவே நமது இலக்குகளை அடைய முடியும். வெற்றிக்கான எளிய வழிகள் என எதுவும், எப்போதும் இருந்ததில்லை. உங்கள் உழைப்பின் 100 சதவீதத்தை வழங்கினால் மட்டுமே வெற்றிக்கான வழி பிறக்கும். ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வு, நேரம் தவறாமை, இலக்கை நோக்கிய பயணம் போன்ற குணங்களால் மட்டுமே வெற்றியை நோக்கிய நமது பயணம் சிறப்பானதாக அமையும்’. இதுதான் மாணவ சமூகத்தின் சக்தி உங்கள் சக்தியும் கூட என்று குறிப்பிட்டார்.
நேரம் என்பது மிக முக்கியமானதாகத் திகழ்கிறது என்று கூறிய அமைச்சர், நேரம் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. அதே நேரத்தில் துக்கத்தையும் தருவதாக அமைந்துள்ளது. வெற்றியைத் தரும் நேரம் சில தருணங்களில் தோல்வியைக் கூட தரக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே நேரத்தின் அருமையை உணர்ந்து நாம் செயல்படுவோமானால், நமக்கு பல்வேறு வெற்றிகள் சாத்தியமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். வாழ்வில் வெற்றியை ருசிக்க வேண்டும் என்றால் காலத்தோடு சேர்த்து நாமும் பயணிக்க வேண்டும் என்ற கருத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இவ்வாறாக மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் கடுமையான உழைப்பு, காலம் தவறாமை ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும், தற்போது அவர்களுக்கு இந்த கடல்சார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதன் மூலமாக அவர்கள் உலகளவில் புகழ் பெற்றவர்களாக திகழ வாய்ப்பிருக்கிறது என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார். நமது நாடு மூன்று புறங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சிறப்பான இந்த நாட்டில் கடல்சார் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கு மிகப் பெரும் முக்கியத்துவம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்று அமைச்சர் கூறினார். இதற்காகத்தான் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெரும்பாலான சமயங்களில் நீரே நமது வாழ்க்கை என்ற பொருள்படும்படியான ஜல் ஹி ஜீவன் என்ற பதத்தை அடிக்கடி கூறுவதுண்டு. அவரது கொள்கையின் அடிப்படையில், இந்த கடல்சார் பல்கலைக்கழகம், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பையும் நல்ல வருமானத்தையும் எதிர் காலத்தில் புகழ்பெற்று விளங்கும் வாழ்வையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை. எனவே இந்த அழகான பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்து கல்வி பயிலும் அந்த காலகட்டத்தை நினைவு கூரத்தக்கதாக மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி, மாணவர்களுக்கு தரமான கல்வியை போதித்து தங்கள் கடமையை ஆற்றி வருவதற்காக, அவர்களுக்கு அமைச்சர் தமது பாரராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்
கௌரவத்தையும், மரியாதையையும், இருப்பிடத்தையும் சிறப்பான வாழ்வையும் வழங்கி தொலைநோக்கு பார்வையை நமக்கு அளித்திருப்பது நமது தாய்நாட்டின் வலிமையாகும். அனைவருடனும் இணைந்து, அனைவருடன் வளர்ச்சி கண்டு, அனைவரின் நம்பிக்கையைப் பெற்று, அனைவரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, குறிப்பாக கடல்சார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்றார் அவர். தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது என்றும், தமிழக மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும் தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார். சமூக மேம்பாட்டிற்கு இம்மாநில மக்களின் பங்கு சிறப்பானதாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தேனி தொகுதி மக்களவை உறுப்பினரும் பல்கலைக்கழக உயர்மட்ட ஆலோசனை அமைச்சுக் குழு உறுப்பினருமான திரு ப. ரவீந்திரநாத், மத்திய அரசின் கடல்சார் தொலைநோக்குத் திட்டம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது என்றும் இதன் மூலம் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார். மேலும் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிக்கு மேல் துறைமுக வருவாயை உருவாக்கும் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். கப்பல் கட்டுமானத்தில் தற்சார்பு நிலையை அடைய நாம் பாடுபட வேண்டும் என்றும் திரு ரவீந்திர நாத் கூறினார்.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் ரமேஷ், பல்கலைக்கழக வேந்தர் திரு சங்கர் ஐஏஎஸ் (ஓய்வு), பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி மாலினி வி சங்கர் ஐஏஎஸ் (ஓய்வு), சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் திரு சுனில் பாலிவால் ஐஏஎஸ், உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.