2024 ஆம் ஆண்டு மோடி அலைதான் வீச போகிறது. 400 எம்பிக்களுடன் பிரதமராக 3ஆவது முறை அவரே அமர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.இந்த ஆண்டின் கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சி என்பதால் இதை திருவிழா போல் கொண்டாட அடையாற்றில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் 2015- 16 ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்தது. அதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றி பெற்றது. அது போல் 2021 ஆம் ஆண்டும் நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள்.
பழைய கதையையே பேசுகிறீர்களே, நீட் வெற்றி குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை? நீட் தேர்வு வந்த பிறகு தனியார் கல்லூரிகளிலும் அரசு கல்லூரிகளிலும் எத்தனை பேர் சேர்ந்துள்ளார்கள் என்பதை ஜாதி பிரிவு வாரியாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணிக்கு திமுக உடன்படக் கூடாது என திருமாவளவன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை தமிழகத்தை பொருத்தவரை சில கட்சிகளுக்கு இங்கு வேலையே இல்லை. இன்னொரு கட்சியின் சின்னத்தில் நின்று ஜெயித்தால்தான் அந்த கட்சிக்கு வாழ்க்கையே!
திமுக என்ற ஒரு கட்டுமரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு கடலுக்குள் இழுத்து சென்று அதை வைத்து தத்தளித்து தப்பி வந்துவிடலாம் என சில கட்சிகள் நினைக்கின்றன. 2024 ஆம் ஆண்டு வர போகிறது, மோடியின் அலை. மூன்றாவது முறையும் பிரதமராக நரேந்திர மோடி 400 எம்பிக்களை வைத்துக் கொண்டு உட்காரத்தான் போகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியுன் போகலாமா, திமுகவுடன் போகலாமா என சில கட்சிகள் யோசிக்கின்றன.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கு பிறகு மூன்றாவது அணி குறித்த பேச்செல்லாம் இருக்காது. பாஜகவுக்கு எதிராக என்னதான் இவர்கள் பிரச்சாரம் செய்தாலும் கூட பாஜக இருக்கும் அணி வென்று தமிழகத்திலிருந்து நிறைய பாஜக எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு கேபினட் அமைச்சர்களாக அமருவார்கள். எத்தனை அணி வேண்டுமானாலும் உருவாகட்டும். ஆனால் பாஜக அணிதான் வெல்லும்.
2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானது. மக்கள் இரு விஷயங்களை பார்த்துதான் வாக்களிக்க போகிறார்கள். தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தால் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும். இதன் மூலம் தமிழகம் அடுத்த நிலைக்கு செல்ல போகிறது. இதைதான் பிரச்சாரத்தில் பயன்படுத்த போகிறோம் என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















