கடந்த 2020-ஆம் ஆண்டு திருவள்ளுவ நாயனார் தினத்தை முன்னிட்டு, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியுடன், காவி உடை அணிந்த திருவள்ளுவ நாயனார் படத்தையும் வெளியிட்டு இருந்தார்.
அவரைப்போலவே பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், திருவள்ளுவ நாயனாரின் காவி உடை அணிந்த படங்களையே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உட்பட அதன் கூட்டணி பரிவாரங்கள் “ தை தை“ என குதித்தன. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி விட்டார்கள் என்று கூப்பாடு போட்டார்கள். இன்னும் சிலர் திருவள்ளுவர் மத சார்பற்றவர் என்று ஒப்பாரி வைத்தார்கள்.
இதெல்லாம் மு.க.ஸ்டாலினும், அவரது சகாக்களும் அப்போது நடத்திய நாடகங்கள்.இந்த முறையும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், தேசபக்த அமைப்பை சேர்ந்தவர்களும், காவி உடை தரித்த திருவள்ளுவ நாயனார் படத்தைத்தான் பயன்படு வாழ்த்து செய்திகளை வெளியிட்டு உள்ளார்கள்.
மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட பல்வேறு இந்து அமைப்பினர் காவி உடை அணிந்த திருவள்ளுவ நாயனாரின் படத்துடன், வாழ்த்து செய்திகளை வெளியிட்டு உள்ளனர்.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,வினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், காவி உடையில் கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்கும பொட்டு உடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது.அந்த போஸ்டரில், முதல்வர் ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி படமும் இடம் பெற்றுள்ளன.
அதேபோல, கோவையில் உள்ள வேளாண்மை பல்கலை நுாலகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், ஜூன் மாதம் அப்படத்தை அகற்ற உத்தரவிடப்பட்டது. தற்போது திருநெல்வேலி தி.மு.க.,வினர், காவி உடை அணிந்த திருவள்ளுவர் போஸ்டர் ஒட்டியதை, தமிழக பா.ஜ., தரப்பில் வரவேற்றுள்ளனர். ஆனால், தி.மு.க.,வில் சலசலப்பு உருவாகி உள்ளது.
ஆனால் இதற்கு முன்பு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதா என்று கொக்கரித்தவர்கள், கூக்குரல் எழுப்பியவர்கள், ஒப்பாரி வைத்தவர்கள் ஒருவர்கூட இன்று வாய்திறக்கவில்லை.மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எங்கே சென்று ஒழிந்தார்கள் என்று புரியவில்லை.
எல்லாம் நாடகம் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.