தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில், கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜ., மேலிடம் ஆர்வம் காட்டுகிறது. இதற்காக மத்திய அமைச்சர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ., பலமான கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாக உள்ளது. சமீபத்தில் இங்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., கணிசமான இடங்களை கைப்பற்றி, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக அது உருவெடுத்துள்ளது.
இது பற்றி அறிந்த பிரதமர் மோடி, தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்று உள்ளது என்ற விபரங்களை அனுப்பும்படி தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டார். இதன்படி, தமிழகத்தில் பா.ஜ., வெற்றி பெற்ற இடங்கள், பெற்ற ஓட்டுகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அண்ணாமலை அனுப்பி வைத்தார்.இதையடுத்து, தமிழகத்தில் பா.ஜ.,வை மேலும் வலுப்படுத்த, மத்திய அமைச்சர்களை இங்கு அனுப்பி வைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்துக்கு உடனடியாக சென்று, பா.ஜ., நிர்வாகிகள், வெற்றி பெற்ற பா.ஜ., கவுன்சிலர்களை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் கடந்த 1ம் தேதி, பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி தொழில் அதிபர்கள், தொழில் அமைப்புகளுக்கு தெரிவிக்கும்படியும் நிர்மலா சீதாராமனை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, நிர்மலா சீதாராமன் நாளை காலை சென்னை வருகிறார்; நாளை மறுதினம் டில்லி திரும்புகிறார். சென்னையில் தங்கியிருக்கும் இரண்டு நாட்களிலும் பா.ஜ., தலைவர்கள், வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மாநில நிர்வாகிகள் உட்பட பலரையும் சந்தித்து பேசுகிறார். மேலும் தொழிலதிபர்கள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
இதேபோல் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராமேஸ்வரத்தில் அடுத்த மாதம் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகம் வர உள்ளனர்.
தமிழ் புத்தாண்டு தினத்தன்று மதுரையில் பா.ஜ., கவுன்சிலர்கள் அனைவரையும், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து பாராட்டு தெரிவிக்கிறார். செப்டம்பரில் கன்னியா குமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து, ஒரு நாள் முழுதும் தியானம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.மேலும் மாதந்தோறும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, பா.ஜ.,வினரையும், மக்களையும் சந்திக்க உள்ளனர். இத்தகவலை பா.ஜ., தேசிய பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்தார்.
தகவல் தினமலர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















