கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு சொந்தமாக வீட்டை கட்டிக்கொடுத்து, அன்னையர் தினமான நேற்று அவரது கனவை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும் இவர், ஆரம்பத்தில் 1 இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். ஆனால், அரசி, பருப்பு விலை உயரவே, தானும் இட்லி விலையை உயர்த்தி 1 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். உதவிக்கு யாரும் இல்லாமல் தானே தனி ஆளாக இட்லி, சட்னி, சாம்பார் தயாரித்து கடந்த 30 வருடங்களாக இந்த இட்லிக் கடையை நடத்தி வருகிறார். அதேபோல, இட்லி சமைக்க கேஸ் அடுப்பும் கிடையாது, மாவு அரைக்க கிரைண்டரும் இல்லை, சட்னி அரைக்க மிக்சியும் இல்லை. வெறும் விறகு அடுப்பையும், ஆட்டுக்கல்லையும் கொண்டே சுடச்சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் ஆகியவற்றை தயார் செய்து காலையில் கடையை திறந்து விடுகிறார். சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் தினமும் இவரது கடைக்கு வந்து இட்லி வாங்கிச் சென்றனர். இதன் பிறகு, 1 ரூபாய் இட்லி பாட்டி என்று அனைவராலும் அழைக்கப்பட்டு பிரபலமடைந்தார்.
கமலாத்தாள் பாட்டியின் இந்த சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இட்லி பாட்டியைப் பற்றி குறிப்பிட்டு, வாழ்த்தும் தெரிவித்திருந்தார். பிறகு, விறகு அடுப்புக்கு பதிலாக சமையல் எரிவாயு அடுப்பும், கிரைண்டர், மிக்சியும் கமலாத்தாள் பாட்டிக்கு வழங்கினார் ஆனந்த் மஹேந்திரா. இதனைத் தொடர்ந்து, பாரத் கேஸ் மாதம்தோறும் 2 சிலிண்டர்களையும், ஹெச்.பி.கேஸ் 1 சிலிண்டரையும் கமலாத்தாள் பாட்டிக்கு வழங்கத் தொடங்கினர். இந்த நிலையில்தான், ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் தனக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் இட்லி பாட்டி கமலாத்தாள். அவரும் இதுகுறித்து ஆனந்த் மஹிந்திராவிடம் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, பாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் 2.5 லட்சம் ரூபாய் செலவில் 1.75 சென்ட் நிலம் வாங்கி, கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து, அதற்கான ஆவணத்தையும் அவரிடம் வழங்கியது. அதேபோல, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியும், இட்லி பாட்டியின் சேவையைக் கேள்விப்பட்டு 2.5 லட்சம் ரூபாய் செலவில் 1.75 சென்ட் இடத்தை கமலாத்தாள் பாட்டி பெயரில் பதிவு செய்து கொடுத்தார். இதன் மூலம் மொத்தம் 3.5 சென்ட் நிலம் கமலாத்தாள் பாட்டிக்கு கிடைத்தது.
இந்த நிலையில், வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளை மஹேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு தொடங்கியது. இந்த கட்டுமான பணிகள் கடந்த 5-ம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி, இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவியை அன்னையர் தினத்தை முன்னிட்டு நேற்று வழங்கினார். இதனை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார். இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















