குத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொற்காலம் – திமுக ஆட்சி கற்காலம். தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசினர். நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுப்போது, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை போன்ற பல வாக்குறுதிகளை அளித்தனர். கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது ஒன்றை நிறைவேற்றியுள்ளதா?
மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். இந்த ஆட்சி நம்பிக்கை மோசடி செய்ததாக மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் இதெல்லாம் வெளிப்படும். பகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளது. ஓராண்டு திமுக ஆட்சியின் மதிப்பீடு ஆனது, நாங்கள் (அதிமுக) ஹீரோவாகவும், இவர்கள் (திமுக) ஜீரோவாகவும் இருக்கின்றனர்.
அம்மா உணவகங்களை படிப்படியாக குறைத்து கருணாநிதி பெயரில் உணவகம் திறக்க முயற்சிக்கின்றனர். மகளிருக்கு இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என அனைத்தையும் முடித்துள்ளனர். இப்படியான ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய நல்ல திட்டங்களை எல்லாம் முடித்துவைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.