தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தமிழ் கற்க வேண்டும் என்றும், தமிழில் பேச வேண்டும் என்றும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தி உள்ளார்.சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஒரு மணி நேரம் நடந்த ஆய்வின்போது, ‘வந்தே பாரத்’ ரயிலுக்கான பிரத்யேக பெட்டிகள், இதர பெட்டிகள், தயாரிப்பு பணிகள், பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த 12 ஆயிரமாவது எல்.ஹெச்.பி., ரயில் பெட்டியை கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.
பின், அமைச்சர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவின்படி, சிறந்த பயண அனுபவம், மேம்பட்ட பாதுகாப்பு, அதிக பயணியர் பயணம் செய்ய வசதி போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் தற்போது, 50 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் நடக்கவுள்ளன. தமிழகத்தில் முதல் கட்டமாக, எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய ஐந்து நிலையங்களும் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேக்கு மட்டும், 3,860 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இது, காங்., ஆட்சியுடன் ஒப்பிடுகையில், மூன்று மடங்கு அதிகமாகும். நாட்டின் முக்கிய துறைமுகங்களை, நகர், கிராமப்புறங்களை இணைக்கும் வகையில், ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சர்வதேச தரத்துடன் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் விரைவு ரயில், புதுடில்லி – வாரணாசி இடையே இயக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல், 75 ரயில்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன. இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்படாது. ‘கவச்’ எனப்படும் ரயில் பாதுகாப்பு கருவி போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
காலத்துக்கு ஏற்றது போல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயணியருக்கான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், ரயில் பாதைகள் வரும் ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வந்தே பாரத் ரயிலுக்கான சக்கரங்கள், இந்தியாவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பயணியரிடம் தமிழில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்திஉள்ளோம். அப்போது தான், தெற்கு ரயில்வே சார்பில் ரயில் பயணியருக்கு சிறப்பான சேவையை அளிக்க முடியும்.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை – குஜராத் மாநிலம், அகமதாபாத் இடையே ‘புல்லட் ரயில்’ இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் மாநிலங்களிலும் புல்லட் ரயில் இயக்குவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள, மாநில அரசுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, ஐ.சி.எப்., பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, ஐ.சி.எப்., தலைமை இயந்திரவியல் பொறியாளர் எஸ்.ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி தினமலர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















