மத்தியில் பா.ஜ.க தலைமையிலான மோடி அரசு பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில், பா.ஜ.க-வினர் தொடர் பிரசார நிகழ்வை முன்னெடுத்துவருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று திருச்சிக்கு வந்தார். காலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தவர், மதியம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஸ்வச் பாரத் மிஷன், அம்ருத் திட்டம், பிஎம் கிசான் திட்டம், சூர்ய மின் உற்பத்தி உயர்வு, ஆதார் ரேஷன் கார்டு இணைப்பால் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டது என மத்திய பா.ஜ.க அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “தமிழக பா.ஜ.க-வைப் பொறுத்தவரை காவிரி, மேக்கேதாட்டூ, முல்லைப்பெரியாறு அணை, இந்தித் திணிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் தமிழர்களுக்கு எது நல்லதோ, தமிழ்நாட்டு மக்களுக்கு எது சரியானதாக இருக்குமோ அதை மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே, `எல்லா தாய் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியிருக்கும்போது எந்த விஷயத்தில் பா.ஜ.க தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டதென்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இரட்டை நிலைப்பாட்டை யார் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். தி.மு.க முல்லைப்பெரியாறில் கபட நாடகம் ஆடுகிறது. நேற்றுக்கூட, `பா.ஜ.க சின்ன கட்சி. நாங்கதான் பெரிய கட்சி’ன்னு ஒரு தலைவர் சொல்லியிருக்காரு. 2021-22 உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள், எந்தக் கட்சி தமிழகத்தின் 3-வது கட்சியாக இருக்கிறது என்கிற டேட்டாவை எடுத்துப் பார்த்தாலே எல்லாம் தெரியும்.என பல்வேறு கருத்துக்களை கூறினார்.