-‘மறைந்த முதல்வர் காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க, 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவரது அறிக்கை:பல தலைவர்களின் நினைவிடங்கள், சென்னை மெரினா கடற்கரையில் இரவிலும் ஜொலிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனால், ஒப்பற்ற தலைவர் காமராஜரின் நினைவிடம் உட்பட, காந்தியை பின்பற்றிய தலைவர்களின் நினைவிடங்கள் கிண்டியில் கவனிப்பாரற்று கிடக்கின்றன.காமராஜர் நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல சீர்படுத்தி, மக்களை கவரும் வண்ணம் அமைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன்.
இதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்.நினைவிடத்தை சீரமைக்க இயலாவிட்டால், அதை சீரமைக்கவும், பராமரிக்கவும் பா.ஜ.,வுக்கு அரசு அனுமதி தந்தால், மேலும் கூடுதல் நிதி திரட்டி, முக்கியமான சுற்றுலா தலமாக மாற்றுவோம் என, உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.காமராஜர் பிறந்த நாள் விழா பேச்சு போட்டியை பா.ஜ., கல்வியாளர் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறக் கூடிய முதல் மாணவருக்கு, 1 லட்சம்; இரண்டாம் பரிசு, 50 ஆயிரம்; மூன்றாம் பரிசாக, 25 ஆயிரம்; 117 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.காமராஜரின் பிறந்த நாளில், பா.ஜ., சுதந்திர தின அமிர்த பெருவிழா நிறைவு நிகழ்ச்சிகளை துவங்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















