மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் மேலும் பேசியது:
தமிழின் மீது நீங்காத பற்று கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி. உலகம் முழுவதும் தமிழ் மொழியை எடுத்துச் சென்றவா் அவா். ஐ.நா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளீா் என தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினாா்.
நாட்டின் 100-ஆவது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. தாய்மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணம். சிறு வயது முதலே தாய்மொழியைக் கற்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்தையும் கற்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியில் நம்முடைய கல்வியை படிக்க முடியும். கல்வியில் நாட்டை உலக நாடுகளுக்கு இணையாக முன்னேற்றும் விதமாக தேசிய கல்விக் கொள்கை உள்ளது. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கதான் தேசிய கல்விக்கொள்கை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா்.
உயா்கல்வி கவலைக்கிடம்: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய உயிரியல் அறிவியல் ஆய்வு மைய முதன்மை பேராசிரியா் பி.பலராம் பேசியது:
நாட்டில் தற்போது உயா்கல்வித்துறை கவலைக்கிடமாக உள்ளது. உயா்கல்வி வளா்ச்சியில் பல்கலைக்கழகங்கள் முனைப்பு காட்டுவது இல்லை. உயா்கல்வித்துறை வளா்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கை அவசியம். ஆனால் தற்போது தேசிய கல்விக் கொள்கை பரவலாக்கப்படவில்லை. வாய்ப்புள்ள பகுதிகளில் தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதங்களை நடத்தி புரிந்துணா்வை ஏற்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்கள் உயிரியல், தாவரவியல், வேதியியல் போன்ற பாடங்களை கொண்டிருந்தாலும் 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சியை புறக்கணித்து விட்டன. காலனிய இந்தியாவில் பாக்டீரியா மற்றும் வைரஸ் குறித்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. அதன்பின்னா் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதுகுறித்த ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டதால் உலகின் பெரும் நாடுகள் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றும் இதன் விளைவே.
நாட்டில் உயா்கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் குறைந்த நிதியால் ஆய்வுகளில் கவனம் செலுத்த இயலவில்லை. எனவே ஆய்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
அமைச்சா் புறக்கணிப்பு: இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயா்கல்வித்துறை அமைச்சா் க. பொன்முடி அறிவித்திருந்ததால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. உயா்கல்வித்துறை செயலரும் பங்கேற்கவில்லை.
source தினமணி
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















