மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக திரிபுரா திகழ்ந்து வந்தது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு 2018ல் பாஜக முடிவு கட்டியது. இதற்கான அசைன்மெண்ட் 2014ஆம் ஆண்டு முதல்முறை மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற போதே தொடங்கிவிட்டது. எல்லைப் பகுதி மாநிலங்களை வசப்படுத்தும் முயற்சியில் திரிபுராவின் மீது கவனத்தை திருப்பியது. நிறைய யுக்திகளை கையாண்டே பாஜக வெற்றி வாகை சூடியது
‘கேரளாவில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சண்டை போட்டுக் கொள்வர்கல். ஆனால், மக்களை ஏமாற்றுவதற்காக, திரிபுராவில் இரு கட்சிகளும் கூட்டணி வைக்கின்றன,” என, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு,சட்டசபைக்கான தேர்தல், வரும் 16ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விடை கொடுத்தீர்கள். அதையடுத்து இந்த மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் துவங்கின. சட்டம் – ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள், குறிப்பாக பெண்கள் தைரியமாக வீட்டை விட்டு வெளியே வர முடிகிறது.
முன்பு எப்போது பார்த்தாலும், உண்டியலைக் குலுக்கி, மக்களிடம் நிதி வசூலித்து வந்தனர். அதற்கு தடை ஏற்பட்டு உள்ளது.
வரும் தேர்தலில், இரட்டை இன்ஜின் எனப்படும் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சியை மீண்டும் மக்கள் உறுதி செய்ய வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றவை. அவற்றை எப்படி கையாண்டாலும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
கேரளாவில் இந்த இரு கட்சிகளும் குஸ்தி போடுகின்றன. ஆனால், இங்கு நட்பு பாராட்டுகின்றன. இதுதான் இவர்களுடைய அரசியல் கொள்கை. மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்வதற்காக இந்தக் கட்சிகள் துடிக்கின்றன.
அதனால் மக்கள் இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.