கர்நாடகா சட்டசபை தேர்தல், மே, 10ல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு முன், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு இன்னும், 11 மாதங்களே உள்ளன. இதனால், ஆளும் பா.ஜ., உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள், இப்போதே தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது. ‘காங்கிரஸ் பைல்ஸ்’ என்ற பெயரில் ‘வீடியோ’ பிரசாரத்தை துவங்கியுள்ள பா.ஜ., முதற்கட்டமாக, கடந்த 70 ஆண்டு கால காங்., ஆட்சியில், 4.82 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் வென்று, நாட்டின் முதல் பிரதமர் நேருவின் சாதனையை சமன் செய்ய வேண்டும் என்பது, பிரதமர் மோடியின் லட்சியம்.
கடந்த ஒன்பது ஆண்டு கால, பா.ஜ., அரசு மீது, ஊழல் குற்றச்சாட்டுகளோ, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்படியாக புகார்களோ இல்லை. தேர்தலுக்கு முன், தன் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில், எந்த குற்றச்சாட்டும் வந்து விடக்கூடாது என்பதில், பிரதமர் மோடி மிக கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர்களை, பா.ஜ., – எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், தேசிய, மாநில நிர்வாகிகள், சங் பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள், பல்வேறு கோரிக்கைகளுக்காக தினமும் சந்தித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள், அவர்களுக்காக பணியாற்றும் நிறுவனங்கள், ஊடகங்கள், பா.ஜ.,வை சிக்க வைக்க, ‘ஸ்டிங் ஆப்பரேஷன்’ நடத்தலாம். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.