பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா செல்ல உள்ள நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் அங்குள்ள மற்றொரு ஹிந்து கோவில் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், நம் பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்களையும் எழுதி உள்ளனர். மேலும், கோவில் நுழைவாயிலில் காலிஸ்தான் அமைப்பின் கொடியும் தொங்கவிடப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
உலகம் முழுதும் உள்ள சுவாமி நாராயணன் கோவில்கள், அமைதி, சமூக நல்லிணக்கம், சமத்துவம், தன்னலமற்ற சேவைகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், சில சமூக விரோதிகள் கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், நம் பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதியிருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது.ஆஸ்திரேலியாவில் உள்ள எங்கள் அமைப்பின் கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இக்கடினமான சூழலில், பக்தர்கள் அனைவரும் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக பிரார்த்திக்க வேண்டும்.இச்சம்பவம் குறித்து, ஆஸ்திரேலிய போலீசாரும், இந்திய துாதரக அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டில் மட்டும், இந்த கோவில் உட்பட ஐந்து கோவில்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து, கடந்த மார்ச்சில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், நம் நாட்டிற்கு வந்தபோது, பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தங்கள் நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது எனவும், இச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, வரும் 24ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க, நம் பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்ல உள்ள நிலையில், மற்றொரு ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















