ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டத்தைச் சேர்ந்த டிங்கு வர்மாவின் மனைவி, 2013ல் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இது தொடர்பாக டிங்குவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனால் ஆதரவின்றி தவித்த இவர்களது 3 வயது மகன், அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கான தொண்டு நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு வளர்ந்து வந்தான்.தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் சிவம், தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யும் பணியில் அவ்வப்போது உதவி வந்தான்.
சமீபத்தில் அன்னதானம் வழங்கிய போது, சிறையில் இருந்து வெளியே வந்த டிங்குவும் வரிசையில் நின்று உணவு வாங்கினார்.அப்போது, சிவம் தன் தந்தையை அடையாளம் கண்டு கொள்ள, டிங்குவும் தன் மகனை தெரிந்து கொண்டார்.
தந்தையும், மகனும், 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்ததை அடுத்து, கண்ணீர் மல்க கட்டித் தழுவிக் கொண்டனர்.இது குறித்து சிவம் கூறுகையில், ”தந்தையை மீண்டும் சந்திப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. இது தெய்வச் செயல்,” என்றார்.
உரிய நடைமுறைகளுக்குப் பின், டிங்குவுடன் சிவத்தை, தொண்டு நிறுவன அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.