அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியின் நீதிமன்ற மன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300 க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிமன்றகாவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர்.
மேலும், இந்த வழக்கில் செந்தில்பாலாஜியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25 ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்