ஓ நீங்கதான் இந்த ஏரியா எம்.பியா… நாலரை வருஷமா ஏன் வரலை…? ஓட்டு கேட்க மட்டும் தான் வருவீங்களா. எங்க ஊருக்கு நன்றி சொல்லக்கூட வரல என கரூர் எம்.பி. ஜோதிமணியை வழிமறித்து கேள்விகளால் துளைத்து எடுத்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தினர். எதிர்கட்சிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் ஜோதிமணி எம்.பி அப்பகுதி மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்றைய முன்தினம் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தபட்டது.கிராமசபை கூட்டங்களில் நாடளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்பது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகத்தில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கரூர் எம்.பி ஜோதிமணி வந்திருந்தார்.அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் ஜோதிமணி எம்.பியை கேள்விகள் கேட்டு துளைத்துவிட்டார்கள்.
கிராமமக்களில் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா?, வாக்கு கேட்க மட்டுமே வருகின்றீர்கள்… அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்கவே இல்லை. குறிப்பாக நன்றி கூற கூட வரவில்லை என்று காட்டமாக பேசினார்.
உடனே ஜோதிமணி எம்பியும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார். நான் இந்த சட்டமன்ற தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்து கொண்டு தான் இருக்கிறேன். கிராமங்களில் நன்றி தெரிவித்து கொண்டு வந்து உள்ளேன். நீங்கள் வேண்டும் என்று என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர்.
அதற்கு பதிலளித்த சாமானியர் எங்கள் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டும் தான் வருகிறீர்கள். கடந்த நான்கரை ஆண்டுகளாக வரவில்லை ஏன் போன் செய்தால் ஒரு முறையாவது எடுத்து உள்ளீர்களா? நாங்கள் யாரிடம் முறையிடுவது? என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கிராம சபை கூட்டத்தில் குடியிருந்த பொதுமக்கள் மற்றும் காவலர்கள்அங்கு சூழ்ந்ததால் சற்று பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர். கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் ஒருவர் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.