உலகமே இந்தியாவை உற்று நோக்கி வருகிறது இதற்கு காரணம் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3, தான். விண்வெளி துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . வல்லரசு நாடுகள் தொடாத முடியாதநிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயன்-3 தொட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடாக இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. நிலவின் தென் பகுதியில் இறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கியுள்ளது.
சந்திராயனின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வரலாற்று நிகழ்வின் போது இந்திய பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் இருந்தார். அங்கிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.
இந்நிலையில் தற்போது நாடு திரும்பிய பிரதமர் மோடி, இன்று காலையிலேயே பெங்களூர் வந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். மேலும் விஞ்ஞானிகளுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, நிலவில் சந்திரயான் தடம் பதித்த பகுதிக்கு `சிவசக்தி’ என பெயர் வைத்தார்.
மேலும், விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 மிஷன் லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கியதை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 23-ம் தேதியை ‘தேசிய விண்வெளி தினமாக’ இந்தியா கொண்டாடப்படும் என்றார்,
தொடர்ந்து பேசிய மோடி, “புதுமையாகவும் தனித்துவமாகவும் சிந்திக்கும் இந்தியா இது. இருண்ட மண்டலங்களுக்குச் சென்று ஒளி பரப்பி உலகை ஒளிரச் செய்யும் இந்தியா இது. சந்திராயன்-2 கால்தடங்களை பதித்த நிலாவின் மேற்பரப்பில் உள்ள இடம் ‘திரங்கா’ (மூவர்ணம்) என்று அழைக்கப்படும். இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் இது ஒரு உத்வேகமாக இருக்கும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை அது நமக்கு நினைவூட்டும்
சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம், அந்த புள்ளி ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும். சந்திரயான் 3=ல் பெண் விஞ்ஞானிகள் முக்கியப் பங்காற்றினர். இந்த ‘சிவசக்தி’ புள்ளி, வரும் தலைமுறையினரை மக்கள் நலனுக்காக அறிவியலைப் பயன்படுத்த ஊக்குவிக்கும். மக்கள் நலன் என்பதே எங்களின் மேலான கடமையாகும். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் துறை 8 பில்லியன் டாலரிலிருந்து 16 பில்லியன் டாலராக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்” என்றார்