கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்த வேண்டும்’ என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., லெஹர் சிங் சிரோயா கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு விஷயத்தில், கர்நாடகாவின் அணைகளில் தற்போதைய தண்ணீர் இருப்பு, 70 சதவீதம் மழை பற்றாக்குறையை மனதில் கொண்டு, கர்நாடக – தமிழக முதல்வர்கள் அமர்ந்து பேசி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து, எனக்கு அவ்வளவாக விபரங்கள் தெரியாது. ஆனால், ஓரளவு பொது அறிவு உள்ளது. இதன் அடிப்படையில் எனக்கு தோன்றிய கருத்துகளை உங்களிடம் கூறுகிறேன்.கர்நாடக அரசு, உள் நோக்கத்துடன் தண்ணீரை நிறுத்தி வைக்கவில்லை என்பதை, தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.
எங்கள் மாநிலத்தின், 70 சதவீதம் தாலுகாக்கள் வறட்சியால் பாதிப்படைந்துள்ளன.குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் வசிக்கும், பணியாற்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் உட்பட, அனைவருக்கும் குடிநீர் அவசியம் என்பதை, தமிழக அரசு உணர வேண்டும். கடந்த 10 – 15 ஆண்டுகளாக மக்கள், மாநிலங்களுக்கு இடையே புலம் பெயர்வது வழக்கமாக உள்ளது.
எனவே நீரின் உரிமை குறித்து பேசும் போது, யதார்த்த சூழ்நிலை, புலம் பெயர்வையும் மனதில் வைத்து ஆலோசிக்க வேண்டும். காவிரி விவாதத்துக்கு, மனித நேய அடிப்படையில் தீர்வு காணுங்கள். இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன், நீங்கள் பேச்சு நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.