அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா., பொதுச் சபையின், 78வது கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் கக்கர், ‘இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ தொடர்புகளையே நாங்கள் விரும்புகிறோம்.
‘பிராந்திய அமைதி,ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற, இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சு நடத்த வேண்டும். பாக்., – இந்தியா இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம்’ என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து, ஐ.நா., சபைக்கான, இந்தியாவின் முதன்மை செயலர் பெடல் கெலாட் பேசியதாவது:ஐ.நா., சபையில், இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதை பாக்., வழக்கமாக வைத்துள்ளது. ஜம்மு- – காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இந்தியாவின் உள் விவகாரங்கள் பற்றி அறிக்கைகளை வெளியிட பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.
உலகளவில், பாகிஸ்தானில் தான் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. இதை முதலில் அந்நாடு தடுத்து நிறுத்த வேண்டும். அதை விடுத்து, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான எங்களை நோக்கி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது.
பயங்கரவாதத்திற்கான கட்டமைப்புகளை பாக்., உடனடியாக மூட வேண்டும். சட்ட விரோத மற்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.