கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தொகுதி பாஜக தேசிய மகளிா் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அவர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அவா் குறைகளைக் கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து தாய், சேய் சிகிச்சைப் பிரிவை பாா்வையிட்டு அங்கு
பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு நரேந்திரன் என பெயா் சூட்டினாா். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.
தாய், சேய் சிகிச்சைப் பிரிவை பார்வையிட்ட போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை குறித்து அவரது தாயிடம் விசாரித்தார். அப்போது அந்த தாய்மார் எனது 3 குழந்தைகள் ஏற்கெனவே இறந்து விட்டது. இது 4வது குழந்தை இந்த குழந்தைக்கும் சில பிரச்சனைகள் உள்ளத்து நிறைய டெஸ்ட் எடுக்கணும் அதான் ஐ சி யு ல வச்சுருக்காங்க என அழுது கொண்டே கூறினார். உடனே வானதி சீனிவாசன் நீங்க பாலூட்டும் தாய் அழக்கூடாது என ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் அந்த குழந்தைக்கு தேவையான உதவிகளை நானே செய்து தருகிறேன் என கூறினார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
இந்த ஆய்வின்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறநோயாளிகளிடம் மருத்துவம் குறித்த குறைகளையும் கேட்டறிந்தார் மேலும் நோயாளிகள் உடன் வருவோர்கள் காத்திருக்கும் பகுதியில் ஆய்வுசெய்து அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து என்னென்ன வசதிகள் செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்தேன். பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் பெண்களுடன் வருபவா்களுக்கு தங்க சரியான இடமில்லை என கூறியுள்ளனா். அதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மருத்துவமனை உணவகத்தில் சுகாதாரமற்ற சூழல் உள்ளது.
அதனை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளேன். இங்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும். பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் பணம் கேட்பதாகவும், பணம் கொடுக்காதவா்களை சரியாக கவனிப்பதில்லை என்ற புகாரும் இருக்கிறது. இது குறித்து மருத்துவமனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பணம் கேட்டு தொந்தரவு செய்தால் உடனடியாக புகாா் அளிக்க வாட்ஸ்ஆப் எண் வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பதாக தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் கூறி உள்ளாா். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது தமிழகத்துக்கு எந்த அளவு நிதி வந்தது என்பதை அவா் தெரிவிக்க வேண்டும். அதைவிட பல மடங்கு நிதியை பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வழங்கி உள்ளாா் என்றாா்.