உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விறுவிறுப்பாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த போட்டி என்றால் நேற்று நடைபெற்ற இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொள்ளும் போட்டி தான். இந்த போட்டியில் பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை கண்டு ரசித்தார்கள்.
டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 36 ரன்களும், அப்துல்லா ஷபிக் 20 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 73 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
பாகிஸ்தான் அணி 12.3 ஓவரில் தன் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. பாபர் அசாம் களத்தில் இருந்த நிலையில், அடுத்து முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும். ஆனால், அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.
ரிஸ்வான் நாடகம் போடுவதில் கில்லாடி என்பது அவர் ஆடிய இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலேயே தெளிவாக தெரிந்தது.நாடகம் ஆடிய ரிஸ்வான், இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங் செய்ய வராமல் இந்திய அணியை காத்திருக்க வைத்தார். இதன் காரணமாக இந்திய ரசிகர்களும் கட்டுப்படைந்தார்கள்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் சென்ற போது ஜெய் ஶ்ரீ ராம் என ரசிகர்கள் முழக்கமிட்டார்கள்.
இந்த நிலையில் போட்டியின் போது இடைவேளை எடுக்கப்பட்டது. போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவதால் அங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்ப ஆதிபுருஷ் படத்திலிருந்து ஜெய் ஸ்ரீராம் பாடல் மைதானத்தில் ஒளிபரப்பப்பட்டது.
பாகிஸ்தான் 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 192 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய 30.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.
உலகக் கோப்பையில் தொடர்ந்து 8-வது முறையாக பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்று வரலாறு சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்த வெற்றியை தொடர்ந்து மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் “வந்தே மாதரம்” பாடலை பாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.