திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் அலுவலகம் நிறுவனங்களில் 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த மாதம் இவர்தான் தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார். ஏனென்றால் அவரின் சொத்து மதிப்பு அப்படி. சாதாரணமாக தொடங்கிய அரசியல் வாழ்க்கை தற்போது ஆலமரமாக கல்வி தந்தை, தொழிலதிபர்,மத்திய அமைச்சர், என கால் பாதிக்காத இடமில்லை
திமுகவின் முக்கிய புள்ளி இவர்தான்.
அவருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.அ.தி.முகவில் தொடங்கி பின்னர் கலைஞருக்கு விஸ்வாசியாக அம்பானி அதானி வரிசையில் இருக்கும் திமுக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்.
தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், 1,250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக கணக்கு காட்டப்பட்டு, வரி ஏய்ப்பு நடந்துள்ள விபரத்தை, வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதாக, போலி கணக்கு காட்டப்பட்ட இருப்பதும் சோதனையில் அம்பலமாகியுள்ளது.
அரக்கோணம் தொகுதி தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பாரத், பாலாஜி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள்…ஈரோடைச் சேர்ந்த டாக்டர் வீரையனுக்கு சொந்தமான சவீதா கல்வி நிறுவனங்கள், வீடுகள், விடுதிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில், இம்மாதம் 5ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை ஐந்து நாட்கள் நடந்தது. இதில், கணக்கில் வராத ஆவணங்களும், கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சகம் சார்பில், வருமான வரித்துறை, புதுடில்லியில் இருந்து, சோதனை விபரங்களை செய்திக் குறிப்பாக நேற்று இரவு வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் இரண்டு குழுமங்களில், கடந்த 5ம் தேதி சோதனை நடத்தினர்.
இந்தக் குழுமங்களுக்கு சொந்தமான மருத்துவ கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் போன்றவற்றில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம், 100 இடங்களில் சோதனை நடந்தது.
இதில், வருமான வரி ஏய்ப்புக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. உதிரியான கணக்கு தாள்கள், டிஜிட்டல் ஆவணங்கள் போன்றவையும் இதில் அடங்கும்.இந்த சோதனையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தி, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கல்வி கட்டணத்தை கணக்கில் காட்டாமலும், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது போன்றும், போலியாக கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது. மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தில் ஒரு பகுதியை கணக்கில் காட்டவில்லை; மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியது போன்று போலியாக தயாரிக்கப்பட்ட ரசீதுகளும் ஆதாரங்களாக கிடைத்துள்ளன.
இந்த வகையில், 400 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கல்வி உதவி தொகை பெயரில், 25 கோடி ரூபாய்க்கு போலி கணக்கு காட்டப்பட்டுஉள்ளது.ஒரு நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், இடைத்தரகர்கள் வாயிலாக மாணவர் சேர்க்கை நடந்ததும், அதற்காக இடைத்தரகர்களுக்கு, 25 கோடி ரூபாய் கமிஷன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
மதுபான ஆலையில், 500 கோடி ரூபாய் அளவுக்கு போலியாக செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது, மதுபாட்டில்கள், அதற்கான சேர்ப்பு பொருள், கூடுதலாக ஆல்கஹால் போன்றவற்றை வாங்கியதாகவும், போக்குவரத்துக்கு கூடுதல் செலவு செய்ததாகவும், பொய் கணக்கு காட்டப்பட்டு உள்ளது.
இந்த கொள்முதல் மற்றும் செலவுக்கான ‘இன்வாய்ஸ்’ ஆவணமோ, இருப்பு பதிவேடோ இல்லை. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக, கணக்கில் வராத பணத்தை, வேறு வழிகளில் வரவு வைத்து பணமாக்கியிருப்பது தெரிகிறது.
அதாவது, செயல்படாத அல்லது இல்லாத நிறுவனங்கள் பெயரில் காசோலை வழங்கப்பட்டு, அதை முதலீடு என்ற வகையில், வேறு வழியில் மீண்டும் திரும்ப பெற்றதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.அதேபோல், வியாபார ரீதியாக அனுமதிக்கப்படாத செலவுகளும், வரிக்கணக்கில் காட்டப்பட்டுஉள்ளன.
அறக்கட்டளைகளில் இருந்து, அறங்காவலர்களுக்கான தனிப்பட்ட செலவாகவும், வணிக முதலீடாக வழங்கப்பட்டதாகவும், 300 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதில், ஒரு நிறுவனம், ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனம் ஒன்றை வாங்க, அறக்கட்டளை வழியே நிதி பரிவர்த்தனை செய்ததும் தெரிய வந்துள்ளது.இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், 32 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் வராத ரொக்கப்பணமும், 28 கோடி ரூபாய் அளவுக்கு தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளில் சிக்கி, கைதாகி சிறையில் உள்ளார்.
இந்நிலையில், தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியிருப்பதால், தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.