நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக திரு L. முருகன் அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு எத்தகையது என்றால் தமிழகத்தில் இதுவரை இருந்த மாநிலத் தலைவர் எவருக்கும் இது போன்ற ஒரு பிரமாண்டமான, பிரமிக்கத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டதில்லை, நேற்று மாலை அவர் விமான நிலையத்தில் வந்து இறங்கிதில் இருந்து, விமான நிலையத்தில் குழுமியிருந்த அத்தனை பாஜக தலைவர்களும், தொண்டர்களும், பின்னர் நிகழ்ந்த வரவேற்பும் ஒரு புதிய மாற்றங்களுக்கான தமிழகத்தை நமக்கு கட்டியம் கூறுகின்றன.
வழி நெடுக அவரை அழைத்துக்கொண்டு வந்த விதமும், அதன் பிறகு மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், பிரமுகர்கள், கட்சி சாராத பாஜக ஆதரவாளர்கள், அனைவரின் மிகப் பலப் பல பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் பெற்றவராக அவர் திகழ்கிறார்.
இந்த, இதுவரை எப்போதும் இல்லாத, பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் எழுச்சியும் உற்சாகமும் பரிபூரணமாக பொங்கி எழுகின்ற ஒரு நிகழ்வு என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்த தலைவர்களும் வந்திருந்து அவரை வாழ்த்தி அவரை பதவியில் அமர வைத்த காட்சி உண்மையிலேயே கண்கொள்ளாக்காட்சி.
இவரது தலைமை பொறுப்பைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள், அதிலும் பெரிதாக எதிர்மறை விமர்சனங்களை பத்திரிக்கையாளர்களும் எதிர்கட்சிகளும் செய்து வருகின்ற நிலையில் , பாரதிய ஜனதா கட்சியின் இப்போது இருக்கும் தமிழகத் தலைவர்கள் அனைவரும் L. முருகன் அவர்களை விட வயதிலும் அனுபவத்திலும் மிகவும் மூத்த இவர்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காது என்கிற ரீதியில் பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக அத்தனை தலைவர்களும் வந்திருந்து இவருக்கு தோளோடு தோளாக நின்று நேற்று பதவி ஏற்க வைத்தது, நிச்சயம் L. முருகன் அவர்களுக்குச் சுற்றிப் போட வேண்டும்!