கடந்த 9 ஆண்டுகளில், பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமான படைப்புகள் இந்தியாவில் உருவெடுத்துள்ளன. அவற்றில் குறிப்பாக நம் பாரத மண்ணிற்கு நெருக்கமான அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், புதிய நாடாளுமன்றம் முதல் வரிசைகளில் உள்ளன.
பல ஆண்டுகளாக நீடித்த விவாதம் மற்றும் சட்டப் போராட்டத்தின் வெற்றியாக நிற்கிறது அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில். 80, 90களில் ராம் ஜென்ம பூமி என்றாலே அந்த விவாதம் நெருப்பாய் கொதிக்கும். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய பங்கு வகித்த அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில், சட்ட ரீதியாக எவ்வித வன்முறையும் இன்றி 2019ல் நீதி அரசர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்றம், வரலாற்று தீர்ப்பை வழங்கி, பல கோடி மக்களின் பிரார்த்தனையை நிஜமாக்கியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடியின் பங்கேற்புடன் பூமி பூஜையும், கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டது. ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மூலம் கட்டுமானம் மேற்பார்வையிடப்பட்டு வருகிறது. இது இந்திய வரலாற்றின் மிகப்பெரிய அத்தியாயமாகும்.
உத்தம புருஷன் ஸ்ரீ ராமரின் கோவில், பிரம்மாண்டத்தின் உச்சமாகவும், 2000 ஆண்டுகளை தாங்கி நிற்கும் கட்டமைப்பையும் பிரதானமாக கொண்டுள்ளது. கட்டுமானத்திற்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளும் பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டது. ‘நாகரா’ கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோவில், நுழைவாயிலை தவிர முழு கோவிலிலும் பிங்க் நிற பாறைகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘பிங்’ நிற பாறைகள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே பன்ஷி மலையில் இருந்து எடுக்கப்பட்டவை. மொத்தம் 4.75 லட்சம் கன அடி கற்கள் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த கற்கள்தான் ‘அக்ஷர்தாம்’ உள்ளிட்ட முக்கிய கோவில்களை கட்டவும் பயன்படுத்தப்பட்டது. சோம்நாத் கோவிலை கட்டிய பிரபாகர் சிங் சோம்புராவின் பேரன் சந்திரகாந்த் சோம்புரா, இக்கோவிலை வடிவமைத்துள்ளார்.
அடித்தளம் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கல்லிலும் “ஸ்ரீராம்” என்று, பல மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவைப்பட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான செங்கல்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தே வந்தவை ஆகும்.
70 ஏக்கரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவில், நூற்றுக்கணக்கான மரங்கள், செடி கொடிகள் என 70%-ம் பசுமையாக காணப்படுகிறது. கோவிலில் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள், 44 கதவுகள் என மூன்று அடுக்குகளைக் கொண்டு, பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
கோவிலில் பிரத்யோகமாக சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர், சிவபெருமான், அன்னபூரணி என தனித்தனி சன்னதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் ஸ்ரீராம சரித்திரத்துடன் நெருங்கிய தொடர்புடைய மகரிஷிகளான வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர், அகஸ்தியர், நிஷாத் ராஜ், தேவி அகல்யா ஆகியோருக்கும் தனி சன்னதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றி ஸ்ரீராம் – சீதா திருமணம், வனவாசம், ராவணனுடனான போர் உள்ளிட்ட ராமாயணத்தை விளக்கும் காட்சிகளை சிலைகளாக வைக்க உள்ளனர். கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் வரும் பக்தர்கள், கிழக்கு வாசல் வழியே வந்து மேற்கு வாசல் வழியாக வெளியேறும் அமைப்புள்ளது. அதோடு, மிக பிரம்மாண்டமாக ஹனுமன் சிலை, ஜடாயு சிலை அமைக்கப்பட்டுள்ளது .
அயோத்தியின் காவல் தெய்வமாக கருதப்படும் பாரம்பரிய ஹனுமன் கோவிலிலும் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ ராமர் கோவிலுக்கும் ஹனுமர் கோவிலுக்கும் இடையே உள்ள சாலைகளை விரிவுபடுத்துதல், மின் விளக்குகளை பொருத்துதல் என, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சுயசார்பு இந்தியா (Atmanirbhar Bharat) திட்டத்தின் கீழ் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், பக்தர்களை கருத்தில் கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தீயணைப்பு பிரிவு, மின் தூக்கி உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், சுவாரசியமூட்டும் அளவில், சரயு நதிக்கரையில் அமைந்துள்ள ராமர் கதை அருங்காட்சியத்தில், 500 ஆண்டுகால ராமர் கோவிலில் நடந்த மாற்றங்களும், 50 ஆண்டுகால சட்ட ஆவணங்களும் வைக்கப்பட உள்ளது.
‘இந்தியா கேட்’ -க்கு அருகில் அமைந்துள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை, கேதார்நாத்தில் உள்ள ஆதிசங்கரர் சிலை போன்ற, உலகப் புகழ்பெற்ற சிலைகளை வடிவமைத்த சிற்பி அருண் யோகி ராஜ், ராமாயணத்தில் கூறப்பட்ட 51 அங்குல உயரத்துடன் கூடிய 5 வயது குழந்தை ராமரின் திருமேனியை கண்முன் கொண்டுவந்துள்ளார்.
அதுமட்டுமின்றி கரு நிறக் கல்லால் ஆன இந்த திருமேனி, பகவான் விஷ்ணுவின் தெய்வீக தன்மையையும், இளவரசரின் பொலிவையும் கொண்டுள்ளது. மேலும், குழந்தை ராமரின் மென்மை, புன்னகை போன்ற அனைத்து அம்சங்களும் கருத்தில் கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை இன்னும் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் வரும் ராம நவமி அன்று, சூரியனின் கதிர்கள் மதியம் 12 மணிக்கு ஸ்ரீ ராமர் திருமேனியின் நெற்றியில் ஒளிரும் வகையில் ஆராய்ச்சி செய்து கட்டப்பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி ஸ்ரீ ராமர் திருமேனியின் வழிபாடு தொடங்கப்பட்டு, 22 ஆம் தேதி பிரதிஷ்டை நடைபெற உள்ளது.
அயோத்தி நகரத்தில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரத்தில் ‘சூரிய ஸ்தம்பங்கள்’ என அழைக்கப்படும் தூண்களின் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. 30 அடி உயரத்தில் நிற்கும் ஒவ்வொரு தூணிலும் சூரியனின் அம்சங்கள் உள்ளன. ராமர் சிலை பிரதிஷ்டைக்கு முன்பே இந்த சூரிய ஸ்தம்பங்கள் தயாராக உள்ளது. இந்த 20 தூண்களும் ‘தரம் சாலை’யில் (Dharam road) இரு புறமும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கல்வெட்டுகளும், அனுமானின் பக்தியை உணர்த்தும் பல அம்சங்களும் உள்ளன.
இந்த நிலையில் அயோத்தி நகரம், விழாக்கோலத்திற்கு மாறத் தொடங்கிவிட்டது. பக்கத்து மாநிலங்களில் இருந்து மக்கள் “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் எழுப்பிக் கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விமர்சனங்களுக்கு பஞ்சமே இல்லை! சில விமர்சகர்கள் இதை கட்டியதே அரசாங்கம் தான் என்றும், பெரிய தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டது என்றும் விமர்சிக்கின்றனர். அதுதான் இல்லை!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அறக்கட்டளை உருவாக்கப்பட்டவுடன் ‘ஒரு ரூபாயை’ முதல் நன்கொடையாக மத்திய அரசு வழங்கியது. இதன் பிறகு, கட்டுமானத்திற்கு எந்த பணமும் வழங்கப்படவில்லை. முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடையே. கட்டுமான செலவுகளை பொருத்தவரை, 2020 பிப்ரவரி முதல் 2023 மார்ச் 31 வரை 900 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் 3000 கோடிக்கும் அதிகமான பணம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து FCRA சட்டத்தின் கீழ் வெளிநாட்டு பணமும் வரத் தொடங்கியுள்ளது. வருமானவரிச் சட்டத்தின் 80G பிரிவின் கீழ் அறக்கட்டளைக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்துகொள்ள முக்கிய தலைவர்கள், சாதுக்கள், கர சேவகர்கள், பிரபலங்கள் என 7000 பேருக்கு அறக்கட்டளையின் சார்பாக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தி தாம் ரயில் நிலையம் தொடங்கி, பல மாற்றங்களை கண்ட அயோத்தி, தற்போது மக்கள் வெள்ளத்தால் ஜேஜே என காட்சியளிக்கிறது. அயோதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் அவர்களது வீட்டில் தீபங்களை ஏற்றி சிறப்பிக்க உள்ளனர். கொண்டாட்டம் அயோதியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாரத மக்களுக்கும் மற்றொரு தீபாவளி கொண்டாட்டமாக உள்ளது