அண்டை மாநிலமான கேரளாவில் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பதை செல்போனில் உறவினருக்கு தெரிவித்து கொண்டிருந்தபோது, அரளி பூவை தெரியாமல் சாப்பிட்ட செவிலியர் மரணம் அடைந்த சம்பவம் கேரளாவில் பலத்த அதிர்வலைகளைஏற்படுத்தியது
கேரளாவில் இளம் பெண் ஒருவரின் மரணத்தை தொடர்ந்து அங்குள்ள கோவில்களில் அரளி பூவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சூர்யா (23) நர்சிங் படிப்பு படித்துள்ளார். இவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை கிடைத்த நிலையில் லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன.
அதன்படி அவர் ஏப்ரல் 28 ஆம் தேதி லண்டனுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் அழைப்பு வரவே, சூரியா போனில் பேசிக்கொடிருந்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் இருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார். அதன் பிறகு வாந்தி, மயக்கம் என ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மறுநாள் உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர், அரளி பூ விஷத்தால் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கேரள அரசு நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட 1,200 கோயில்களிலும் மற்றும் மலபார் தேவசம்போர்டுக்கு உட்பட்ட 1,300 கோயில்களிலும் அரளி பூக்களை இனி பிரசாதமாக வழங்கிட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குமாற்றாக, பக்தர்கள் துளசி, இட்லிபூ, ரோசாப்பூக்களை நைவேத்தியம் மற்றும் பிரசாதத்துக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறது. கோயில் பூஜைகளில்அரளிப்பூக்களைப் பயன்படுத்தலாமே தவிர்த்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரளி பூவின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வுகளை நடத்திய டாக்டர் பெனில் கோட்டக்கல், பூவில் உள்ள ஆல்கலாய்டுகள் கார்டியாக் கிளைகோசைடுகளின் வகையைச் சார்ந்தது. இந்த பூவில் உள்ள ஆல்கலாய்டுகள் இதயத்தில் நேரடியாகச் செயல்படுகின்றன. தண்டின் உள்ளே காணப்படும் லேடெக்ஸில் ஆல்கலாய்டுகளின் இருப்பு மிக அதிகமாக உள்ளது,” என்றார். அதிக பூக்களை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய ரக அரளி செடிகளில் இந்த நச்சுகள் அதிகம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. “இருப்பினும், அது இன்னும் அறிவியல் பூர்வமாக அளவிடப்படவில்லை,” என கூறினார்.