அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நரேந்திர மோடியே பிரதமர் ஆக நீடிப்பார்”, ஜூன் 4 க்கு பிறகு தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
டில்லியில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்து நிருபர்களை சந்தித்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசுகையில் ‛இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்கின்றனர். பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளர் யார் என நான் அக்கட்சியிடம் கேட்கிறேன். பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17 அன்றுடன் 75 வயதாகிறது. பா.ஜக வில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை அவர் வகுத்துள்ளார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர்.
தற்போது பிரதமருக்கு 75 வயது ஆகப் போகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால், முதலில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவியில் இருந்து இறக்குவார்கள். பிறகு அமித்ஷா பிரதமராக பதவியேற்பார். அமித்ஷாவுக்காக பிரதமர் ஓட்டு கேட்கிறார். மோடியின் கியாரன்டிகளை அமித்ஷா நிறைவேற்றுவாரா என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் உள்துறைஅமைச்சர் அமித் ஷா பேசுகையில் :
நாட்டில் அனைத்து பகுதி மக்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நிற்கின்றனர். பா.ஜ.க 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். தென்னிந்தியாவில் மேகப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும். மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு நன்கு தெரியும். இதனால் தான் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். 2029 வரை மோடியை நாட்டை வழிநடத்துவார். வரும் தேர்தலிலும் வழிநடத்துவார். இண்டியா கூட்டணிக்கு நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. பொய் பரப்பி அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது. தான் கைது செய்யப்பட்டது தவறு என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வேண்டினார். ஆனால், அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமின் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்த நாள் அவர் விசாரணை அமைப்புகளிடம் சரண் அடைய வேண்டும். தனக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதாக கெஜ்ரிவால் நினைத்துக் கொண்டால், சட்டத்தை பற்றிய புரிதல் அவருக்கு இல்லை.
இன்று திருப்தி படுத்தும் அரசியலின் உச்சத்தை காங்கிரஸ் செய்து வருகிறது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளது எனக்கூறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பணயம் வைக்கும் செயலை அக்கட்சியின் ஆதரவாளர்களான மணிசங்கர் அய்யர் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் செய்கின்றனர். அவர்களுக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால் பொய்களை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















