நமது அண்டை மாநிலமான கேரளாவை மர்மக்காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் காரணமாக கடந்த 2 வாரங்களில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது . மேலும் ஏராளமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு காய்ச்சல்களால் கேரள மக்கள் திண்டாடி வருகின்றனர்.கேரளாவில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் காரணமாக கடந்த 2 வாரங்களில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோழிக்கோடு, மலப்புறம், திருச்சூர் மாவட்டங்களில் 10 பேருக்கு வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெஸ்ட் நைல் வைரஸ் உகாண்டா நாட்டில், வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், அப்பெயரில் அழைக்கப்படுகிறது.
வெஸ்ட் நைல் வைரஸ் என்பது, ‘க்யூலக்ஸ்’ வகை கொசுக்களால் பரவக்கூடிய நோய். இந்த வைரஸ் பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கும், பின் கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவுகிறது. ஆனால், ஒரு மனிதரிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான மக்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. மேலும் இந்த காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற பொதுவான அறிகுறிகள் தான் காணப்படும்.
மேலும் இந்த வைரஸ் காய்ச்சலால் அதிக காய்ச்சல்,கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம், பக்கவாதம் மற்றும் மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது இந்த வைரஸ் காய்ச்சல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. ஆனால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு எளிதாக ஏற்படும். மேலும் கேரளாவில் வரும் 17 ம் தேதி முதல் 22ம் தேதி வரை மிககனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், 400 முதல் 500 மில்லிமீட்டர் வரையிலான மழை பதிவாகலாம் என்றும் வார்னிங் வெளியாகி உள்ளது இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கேரளா மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளார்கள்
இதனிடையே கேரளாவிலிருந்து தமிழகம் வரும் மக்களை தமிழக எல்லைகளில் தீவீரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த காய்ச்சல் பரவினால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின்பேரில் எடுத்து கொள்ள வேண்டும். காய்ச்சலால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க போதியளவு நீர் மற்றும் திரவ உணவை உட்கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீடுகளை சுற்றி சுத்தமாகவைத்து கொள்ள வேண்டும். நீர்தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்று இதற்கு தடுப்பூசிகள் இல்லை.
அதனால், உடனடியாக சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடல்முழுவதும் மறைக்கும் ஆடை அணிய வேண்டும். கொசுவலை, கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 104 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















