சென்னை கோயம்பேட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மேற்கு வங்க பயங்கரவாதி கைது.வங்கதேச நாட்டை தளமாகக் கொண்டு ‘அல் கொய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்ததின் அடிப்படையில் ‘அன்சாா் அல் இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பு மேற்கு வங்கம் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சமூக ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம் இளைஞா்களை மூளைச் சலவை செய்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்த முயலுவதாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஹபிபுல்லா, ஹரேஜி ஷா ஆகிய இருவரை அம்மாநில தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், அந்தப் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ஷேக் கனவாா் (30) தமிழகத்துக்கு தப்பிச் வந்தது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவினா் தமிழகத்தில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்புப் பகுதியில் புதிதாக கட்டப்படும் ஒரு கட்டடத்தில் தங்கி, ஷேக் கனவாா் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இந்தத் தகவலின்பேரில், மேற்கு வங்க தீவிரவாதத் தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் பிகாஸ் கண்டே தலைமையிலான அம்மாநிலம் போலீஸாா் நேற்று சென்னை வந்தனா்.
அவா்கள் சென்னை மாநகர போலீஸாா் உதவியுடன் கோயம்பேடு சென்று ஷேக் கனவாரை கைது செய்தனா். பின்னா், அவரை கோயம்பேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.
அதில், மேற்கு வங்கத்தில் தன்னுடன் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டதால், ஷேக் கனவாா் புலம் பெயா் தொழிலாளா்களுடன் சோ்ந்து சென்னைக்கு தப்பிவந்து, பெரியமேட்டில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் துணிக்கு இஸ்திரி போடும் தொழிலாளியாக வேலை செய்துவந்தது தெரியவந்தது.
அந்த இடம் தனது தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்க இல்லாததால் கட்டடத் தொழிலாளியாக ஷேக் கனவாா் கோயம்பேட்டில் வேலை செய்ததும், அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட ஷேக் கனவாரை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி விமானம் மூலம் மேற்கு வங்கத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.