கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மலைக்குன்றில் அருள்மிகு ஸ்ரீ ரத்தனகிரீஸ்வரர் திருகோவில் சுமார் 1,176 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மலைக்கோயிலில் கரூர், திருச்சி,திண்டுக்கல்,நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வயது முதிர்ந்தவர்கள் படிகள் வழியாக ஏறி மலை உச்சிக்கு சிரமப்படுவதால், ரோப் கார் வசதி செய்துதர வேண்டும் என்று பலவருடங்களாக கோரிக்கை வைத்த நிலையில் ரூ 6.70 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் வசதியானது கடந்த 24-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பக்தர்களை கோயில் மலை உச்சிக்கு சென்ற ரோப்கார் நகராமல் நடுவழியில் நின்றது. இதனால் அந்த ரோப்கார் பயணித்த பக்தர்கள் நடுவழியில் சிக்கித் தவித்தனர். அந்தரத்தில் நின்றதால், அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். அதைப் பார்த்த ஊழியர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து விழி பிதுங்கி நின்றனர்.
நீண்ட நேரம் போராடி அந்தரத்தில் சிக்கிய பக்தர்களை பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டு அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதல்வரால் முதல்நாள் திறந்து வைக்கப்பட்ட ரோப் காரில் மறுநாள் பயணித்த பெண் பயணிகள் அந்தரத்தில் சிக்கித் தவித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் அந்தரத்தில் பழுதாகி நின்ற ரோப் காரில் பல பக்தர்கள் மாட்டிக்கொண்டு தவித்தார்கள், எனவே இந்த நிகழ்வுக்கு இந்து சமய அறநிலையத்துறையே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தக்கூடிய இது போன்ற ரோப் கார் சேவைகளை அவசரகதியில் தொடங்கியது ஏன்? இந்து சமய அறநிலையத்துறை மக்களின் உயிரோடு விளையாடுகிறதா? என்று இந்து முன்னணி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
source Mediyaan