ஆம்ஆத்மி நிர்வாகி,டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான அமனதுல்லா கான், டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது.
அதன் மூலம் கிடைத்த லஞ்சப் பணத்தில் அசையா சொத்து வாங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்நிலையில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் நேரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், “தன்னை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர்” என அமனதுல்லா கான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி – ஆக்லா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் அருகே காவல் துறையினர் அதிகளவில் குவிந்துள்ளனர். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
“சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில் அவரது கைப்பாவையாக உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை எனது வீட்டுக்கு வந்தனர். என்னையும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களையும் துன்புறுத்துவது சர்வாதிகாரியின் நோக்கம். மக்களுக்கு நேர்மையாக இருப்பது குற்றமா? இன்னும் எத்தனை காலம்தான் இந்த சர்வாதிகாரியின் ஆட்சி நீடிக்கும்?” என எக்ஸ் தளத்தில் அமனதுல்லா கான் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கடந்த மார்ச் மாதம் அமனதுல்லா கான் கோரிய முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















