தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற உள்ளது. இந்த வெற்றி மாநாட்டிற்கு எந்த வித இடர்பாடும் இல்லாமல், தமிழக அரசு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று பாஜக கேட்டுக் கொள்கிறது.
மாநாட்டில் பாபாசாகிப் அம்பேத்கர், ஈ.வெ. ராமசாமி, காமராஜர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் கட் அவுட்டுகள் மற்றும்
தமிழன்னை, வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள்,தமிழக மூவேந்தர்களின் உருவப்படங்களும் கட்டவுட்களாக வைக்கப்பட்டு மாநாட்டு ஏற்பாடுகள் ஊர் வழக்கமான அரசியல் மாநாட்டுக்குரிய உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசியலில் ஒரு சிறந்த மாற்றம் உருவாக வேண்டும். எழுபது ஆண்டுகால, மக்கள் மக்கள் விரோத ஊழல் ஆட்சிகளுக்கு மாற்றாக,புதிய கட்சியின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்கிற 6 கோடி தமிழக மக்களின் எண்ணத்திற்கு விடை கொடுக்கின்ற தேர்தலாக வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் இருக்கப் போகிறது.
மக்கள் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல் மக்கள் நலத் திட்டங்களில் ஊழல் செய்து கொள்ளையடித்து,தமிழக மக்கள் சுரண்டிய ஆட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அரசியல் சுயநலத்திற்காக சாதிய, மதவாத, பிரிவினைவாத அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடம் மேலோங்கி உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஊழல் கட்சிகளுக்கு,ஆட்சிகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை முதலில் வெளியிட்டார்.
நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட போதும், தமிழக வெற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதும்,முதலில் வரவேற்று விஜய் அவர்கள் முடிவை வாழ்த்தி மகிழ்ந்தது தமிழக பாரதிய ஜனதா கட்சி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவின் அனைத்து தலைவர்களும் விஜய் தமிழக அரசில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக மக்களும் ஒரு மாற்று அரசியல் வேண்டுமென்ற அடிப்படையில் விஜய் நிச்சயம் ஊழல் அரசியல் கட்சிகளை விரட்டி அடிப்பார். தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத ஊழல் ஆட்சியை எதிர்த்து குரல் கொடுப்பார். சாதிய மதவாத பிரிவினைவாத அரசியல் செய்ய மாட்டார். தமிழக மக்கள் நலனுக்காக தேசிய சிந்தனை உடன் போராடுவார் என்கிற நம்பிக்கையுடன் ஆதரவளித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் அவர்கள் தமிழக அரசியலில் மிக கவனமாக செயல்பட்டு வெற்றிப் படிகளில் ஏற வேண்டும். குறுகிய கால தேர்தல் அரசியலுக்காக, தன்னுடைய படத்தின் ரிலீஸ் பிரச்சனைக்காக தமிழக அரசை, திமுக கட்சியை திருப்திப்படுத்த, அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, மத்திய மோடி அரசின் சாதனைகளில் சிறந்ததாக கருதப்படுகிற, இந்திய கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்திய,அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய ஏழை,கிராமப்புற நடுத்தர மாணவர்களை உலகமே போற்றும் மருத்துவர்களாக உருவாக்கும் வகையில் மாணவர்களின் கனவுகளை லட்சியங்களை நிறைவேற்றி வரும் நீட் தேர்வுக்கு எதிராக தவறான விமர்சனங்களை முன் வைத்தது போல்,எதிர்காலத்தில் செயல்படாமல், எதிர்மறை விளம்பரம், நம்மை அரசியல் உச்சத்திற்கு கொண்டு போய்விடும் பொய் கூறி தவறாக வழி நடத்தி வரும் சதிகார அரசியல் ஆலோசகர்களுக்கு இடம் கொடுக்காமல், மத்திய மாநில அரசின் திட்டங்களை ஆராய்ந்து மக்கள் நலனுக்கு உகந்த வழியில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
வாக்கு வங்கி அரசியலுக்காக இந்து மதத்தை இகழ்ந்தும், இஸ்லாமிய,கிறிஸ்துவ மதங்களை புகழ்ந்தும், சனாதன தர்மம் என்றால் என்னவென்றே தெரியாமல், அறியாமல் புரியாமல், அரசியல் லாபத்திற்காக, விளம்பரத்திற்காக அவதூறு பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான அரசியலையும் புறம் தள்ள வேண்டும்.
தமிழக வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் மகிழ்ச்சிக்கும் வலிமை சேர்க்கும் வகையில் நேர்மறை அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னுடைய தமிழக வெற்றிக்கழக தில் கனவுகளோடும் லட்சியங்களோடும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உயர்ந்த எண்ணத்தோடும் இணைந்துள்ள இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு,பெண்களுக்கு புதிய அரசியல் பாதையை உருவாக்குவார் என்று நம்புகிறேன்.
வன்முறை அரசியலுக்கும், இலவச மது போதை, பிரியாணி ,
ஊழல் பண, உடன்பிறப்பு அடிமை அரசியலுக்கும் முடிவு கட்டி, இளைஞர் சமுதாயத்திற்கு, மக்கள் சேவையின் மகத்துவத்தையும், வலிமையையும், உணர்த்தும் உலகம் போற்றும் முன்மாதிரி அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.