தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான, ஐயா திரு ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும். ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?
அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.என குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















