மத்திய உள்துறை அமைச்சரும்,கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித்ஷா, பால்வளம், மீன்வளக் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து புதியதாக நிறுவப்பட்டுள்ள 10,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம்,கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங்,மத்திய கூட்டுறவு இணை அமைச்சர்கள் கிரிஷன் பால்,முரளிதர் மொஹால்,கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகிய இரண்டு முக்கியத் தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தி அமித்ஷா தமது உரையைத் தொடங்கினார். நாட்டின் சுதந்திரம்,கலாச்சாரம், இந்தியத்தன்மையை மேம்படுத்துவதற்கும்,மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முன்னணி நபராக பண்டிட் மால்வியாவை அவர் பாராட்டினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் பற்றி பேசிய அமித்ஷா, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்தார். பிரதமராக இருந்தபோது அடல் ஜியின் தொலைநோக்கு தலைமை இந்தியாவின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தது என்று அவர் கூறினார். பழங்குடியினர் விவகாரங்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியது, ‘தங்க நாற்கர’ நெடுஞ்சாலைகளை உருவாக்கியது போன்ற அடல் ஜியின் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளையும் அமித்ஷா குறிப்பிட்டார்.
இந்த நாள் சுதந்திர போராட்ட வீரரும், வேத இலக்கியங்களின் அறிஞருமான சி ராஜகோபாலாச்சாரியின் நினைவு நாளையும் குறிக்கிறது என்று அமித் ஷா மேலும் குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் ராஜகோபாலாச்சாரியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும், நாட்டின் வரலாற்றில் அவரது நீடித்த மரபையும் அவர் குறிப்பிட்டார்.
10,000 புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் குறித்து அறிவிக்கப்பட்ட 86 நாட்களுக்குள் அவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவியவுடன், கூட்டுறவினர மூலம் வளம் என்ற குறிக்கோளை அறிமுகப்படுத்தினார் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வையை அடைய ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கூட்டுறவுகள் தேவை என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார். தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவின் மூன்று அடுக்கு கூட்டுறவு கட்டமைப்பின் அடித்தளம் என்று அவர் விளக்கினார். அதனால்தான் மத்திய அரசு 2 லட்சம் புதிய தொடக்க வேளாண் கடன் சங்கங்களை நிறுவ ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். கூட்டுறவு அமைப்புகளின் கணினிமயமாக்கல் பல்துறை முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா 10 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூபே கிசான் கடன் அட்டைகள், மைக்ரோ ஏடிஎம்களை விநியோகித்தார். தற்போது நடைபெற்று வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு தொடக்க பால் பண்ணையிலும் மைக்ரோ ஏடிஎம் விரைவில் பொருத்தப்படும் என்று அவர் கூறினார். புதிய மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொள்வது பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், பழங்குடியினரின் தீவிர பங்கேற்பை உறுதி செய்வதையும், சமூக – பொருளாதார சமத்துவத்தை வளர்ப்பதையும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 2 லட்சம் புதிய பிஏசிஎஸ் நிறுவ மோடி அரசு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளதாகவும், இந்த இலக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அடையப்படும் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















