இந்தியப் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ரயில் பயணத்தை வழங்க புத்தாண்டு தயாராக உள்ளது. குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர அமர்ந்து செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வெற்றிகரமாக வழங்கியதையடுத்து, நீண்ட தூர ரயில்களுக்கும் இதை இந்திய ரயில்வே நனவாக்க உள்ளது.
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கடந்த மூன்று நாட்களில் அதன் பல சோதனைகளில் மணிக்கு 180 கி.மீ வேகத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகளுக்கு நீண்ட தூர பயணத்திற்கான உலகத்தரம் வாய்ந்த பயணம் கிடைக்க இந்த மாத இறுதி வரை இந்த சோதனைகள் தொடரும்.
கோட்டா பிரிவில் வெற்றிகரமான சோதனையின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயிலின் வேகம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
வந்தே பாரத் ரயிலுக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி குவளை வைக்கப்பட்டிருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. ஓடும் ரயில் மணிக்கு 180 கி.மீ என்ற நீடித்த உச்ச வேகத்தை எட்டியபோதும், தண்ணீர் ஆடாமல் நிலையாக இருப்பதை வீடியோவில் காணலாம். இது அதிவேக ரயில் பயணத்தில் வசதியின் அம்சங்களை வெளிப்படுத்துகிறது. வந்தே பாரத் ரயில் அதன் உச்ச வேகத்தைத் தொட்ட 3 நாள் வெற்றிகர சோதனைகளுக்குப் பின் இந்தப் பதிவு இடப்பட்டுள்ளது.
தற்போதைய சோதனைகள் முடிந்ததும், ரயிலின் அதிகபட்ச வேகம் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் மதிப்பீடு செய்யப்படும். இறுதி கட்டத்தை கடந்த பின் அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் பெற்று இந்திய ரயில்வேயிடம் வழக்கமான சேவைக்காக ஒப்படைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் தானியங்கி கதவுகள் உட்பட விமானம் போன்ற வடிவமைப்புகளுடன் இருக்கும்.
இந்த வெற்றிகரமான சோதனைகளின் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, தில்லி முதல் மும்பை வரை, ஹவுரா முதல் சென்னை வரை பல வழித்தடங்களில் உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வந்தே பாரத் ரயில் பயணிகள் எதிர்பார்க்கலாம். பயண நேரமும் கணிசமாக குறையும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















