பாரத பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்தத்தில் இருந்து பல பயனுள்ள நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.இந்நிலையில்,பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது செல்வமகள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து 2025 ஜனவரி வரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கணக்குகளில் மொத்தம் ரூ.8,351 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் சென்னை நகர கோட்டங்கள் தவிர, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி கோட்டங்களும் அடங்கும்.
சென்னை நகரப் பகுதியில் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில், 2025 பிப்ரவரி 21, 28, மார்ச் 10 ஆகிய தேதிகளில் செல்வமகள் சேமிப்புக் கணக்குகளை தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்நாட்களில் முக்கிய தபால் அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளை அஞ்சலகங்கள் தவிர, அனைத்து தபால் அலுவலகங்களிலும் செல்வமகள் சேமிப்புக் கணக்கை தொடங்கலாம்.
இந்த திட்டத்தின்கீழ், 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250-ம், அதிகபட்சம் ரூ.1.5 லட்சமும் செலுத்தி கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டக் கணக்கிற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி-ன் படி, ஒரு நிதியாண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. பெண் குழந்தையின் 18 வயதில் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் உயர்கல்வி நோக்கங்களுக்காக கணக்கில் இருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பின் கணக்கு முதிர்ச்சி அடைகிறது. 18 வயது நிரம்பியப் பின் (திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன் அல்லது 3 மாதங்களுக்குப் பின்) திருமணத்தின் போது கணக்கை முடித்துக் கொள்ளவும் வழி உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















