அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதில் பாமகவும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் திமுகவுக்கு பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவு தான் ஆர்.எஸ் பாரதியின் பேச்சு என்றும், அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய இருப்பதாகவும், அப்போது திமுக எந்த அளவுக்கு மிரளப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் .பிரதமர் குறித்து பேசிய ஆர்.எஸ் பாரதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். வானதி சீனிவாசன்.
அவர் கூறியுள்ளதாவது! தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை.
கடந்த 2024 ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று, திராவிட முன்னேற்ற கழகம் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.
ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் அவர்கள், அம்மாநிலத்தை ஆண்ட, ‘பிஜூ ஜனதா தளம்’ கட்சியில் சேர்ந்து, தீவிர அரசியலில் ஈடுபட்டார். அதற்கு அக்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. ஒடிசா மக்களும் பாண்டியன் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை விரும்பவில்லை. அதனால்தான், “பாண்டியன் அரசியலில் தலையிட மாட்டார். ஆட்சி அதிகாரத்துக்கு வர மாட்டார்” என்று, பிஜு ஜனாதளம் கட்சியின் தலைவரும், அப்போது முதலமைச்சராக இருந்தவருமான நவீன் பட்நாயக் அறிவிக்க வேண்டிய நிலை வந்தது.
ஒடிசா மக்களின் அந்த மனநிலையைதான் அமித்ஷா வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஜெயலலிதா அவர்களை மைசூரில் பிறந்தவர் என்பதற்காக, ‘கன்னடர்’ என்றும், தமிழக மக்களின் மனங்களை வென்று தான் உயிரோடு இருக்கும் வரை திமுகவை ஆட்சி அதிகாரத்துக்கு வரை விடாமல் செய்த எம்ஜிஆர் அவர்களை, ‘மலையாளி’ என்றும், திமுகவில் M. K. Stalin க்கு போட்டியாக வந்து விடுவார் என்பதற்காக கட்சியை விட்டு நீக்கப்பட்ட வைகோவை, ‘கலிங்கப்பட்டி தெலுங்கர்’ என்றும் வசைபாடிய ஒரு கட்சி, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதை பாஜக எதிர்த்தது என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆகவில்லை. அதற்கான வாய்ப்பு இருமுறை வந்தது. முதல் முறை பெருந்தலைவர் காமராஜருக்கு வந்தது. அதை அவரே விரும்பவில்லை. ஏற்கவில்லை. இரண்டாவது முறையாக காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனாருக்கு வந்தது.
1997ல் தேவகவுடாக்கு பிறகு ஜி.கே. மூப்பனாருக்கு வந்த பிரதமர் வாய்ப்பை தடுத்து நிறுத்தி ஐ.கே. குஜ்ராலை பிரதமர் ஆக்கியது திமுக. தமிழர் ஒருவர் பிரதமராவதை தடுத்து நிறுத்திய கட்சி, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசா முதலமைச்சர் ஆவதை பாஜக தடுத்துவிட்டது என்று கூறுவது வேடிக்கையாக இல்லையா? கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்.
“அதிமுக, பாமகவை கபளீகரம் செய்து அந்த இடத்தில் பாஜகவை கொண்டு வருவது தான் அமித்ஷாவின் ஒற்றை இலக்கு” என்றும் ஆர். எஸ். பாரதி கூறியிருக்கிறார்.
அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுவிட்டது. அதில் பாமகவும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் திமுகவுக்கு பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவு தான் இப்படி புலம்பி தள்ளியிருக்கிறார் ஆர்.எஸ் பாரதி. கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல், அந்தக் கட்சிகளை எல்லாம் ஏமாற்றி வரும் திமுக, மற்ற கட்சிகளைப் பார்த்து கபளீகரம் செய்கிறது என்று பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.
இதற்கே இப்படி என்றால், அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய இருக்கின்றன. அப்போது திமுக எந்த அளவுக்கு மிரளப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரான கட்சி பாஜக என்று நிறுவ திமுக முயற்சிக்கிறது. அதற்காகவே ஆர்.எஸ். பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழர் ஒருவரை பிரதமராக விடாமல் தடுத்து நிறுத்திய திமுக தான், தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரான கட்சி. இதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். இதை யாராலும் மறுக்க முடியுமா? பதில் சொல்லுங்கள் ஸ்டாலின்
Get real time update about this post categories directly on your device, subscribe now.















