உலகத்துக்கே சட்டம் பேசும் அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக அந்தச் சட்டங்களையே காலால் மிதித்து வருகிற நிலையில், இந்தியா எடுத்துள்ள இந்த முடிவு வெறும் பொருளாதார நடவடிக்கை அல்ல, இது தேசிய பாதுகாப்பு சார்ந்த தெளிவான அரசியல் பதிலடி. வர்த்தக போர், பொருளாதார அழுத்தம், அந்நிய நாடுகளில் திடீர் ராணுவ தலையீடு, வெனிசுலா போன்ற நாடுகளில் நேரடி தாக்குதல் என அமெரிக்காவின் அடாவடி போக்கு நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் வெளிநாட்டு கருவூலங்களில், குறிப்பாக அமெரிக்க கட்டுப்பாட்டில், இந்தியாவின் தங்கம் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுவது இயல்பே.
அதற்கான பதில்தான் ரிசர்வ் வங்கி எடுத்த இந்த வரலாற்று முடிவு. கடந்த மார்ச் முதல் டிசம்பர் 2025 வரை கிட்டத்தட்ட 80 டன் தங்கத்தை இந்தியா நாட்டுக்குள் திரும்ப கொண்டு வந்துள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய அளவில், இவ்வளவு குறுகிய காலத்தில் தங்கம் திரும்பப் பெறப்பட்டதே இல்லை. இதன் மூலம் இந்தியாவில் உள்ள உள்நாட்டு தங்க இருப்பு 600 டன்னாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2025 இறுதியில் இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880.8 டன் என்ற அளவுக்கு சென்றுள்ளது என்பதே மோடி தலைமையிலான அரசின் நீண்டகால பார்வையை காட்டுகிறது.
இதில் இன்னும் ஒரு பகுதி இங்கிலாந்து வங்கி மற்றும் BIS வசம் இருந்தாலும், முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு கட்டுப்பாட்டிலிருந்து இந்தியா திட்டமிட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் கையிருப்புகள் முடக்கப்பட்டதும், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தானின் சொத்துகள் கைப்பற்றப்பட்டதும் உலக நாடுகளுக்கு கொடுத்த மிகப் பெரிய எச்சரிக்கை இதுதான் – மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகள் எந்த நேரமும் அரசியல் ஆயுதமாக மாறலாம்.
இந்த அபாயத்தை முன்னமே கணித்ததால்தான் 2023 முதலே இந்தியா தங்கத்தை திரும்பப் பெற ஆரம்பித்தது. இது அவசர முடிவு அல்ல, திட்டமிட்ட தேசிய உத்தி. தங்க விலை தற்போது உயர்ந்துள்ளதால், ஆர்பிஐ தற்காலிகமாக வாங்குவதை நிறுத்தி காத்திருப்பதும் அதே புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு. விலை குறையும் போது வாங்குவது தான் நாட்டுக்குப் பயன் என்பதில் மோடி அரசு தெளிவாக இருக்கிறது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் தங்கத்தை குவித்து வரும் நிலையில், இந்தியா மட்டும் கண்மூடி தனமாக ஓடவில்லை, கணக்கு போட்டு நகர்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் தங்க இருப்பு 35 சதவீதம் உயர்ந்துள்ளது, உலக தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா இன்று ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என்பதே இந்தியாவின் நிதி சுயாதீனத்தை காட்டுகிறது. டாலரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வரும் இந்த காலத்தில், தங்கத்தை இந்திய மண்ணில் பாதுகாப்பாக வைத்திருப்பது தேசியவாத முடிவு மட்டுமல்ல, எதிர்கால தலைமுறைகளுக்கான காப்பீடு. இது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஒரே நேரத்தில் அனுப்பப்படும் ஒரு மௌன செய்தி – இந்தியா இனி யாருடைய கருணையிலும் இல்லை. சத்தம் இல்லாமல், மேடை பேச்சு இல்லாமல், ஆனால் உலகம் முழுக்க கவனிக்க வேண்டிய அளவுக்கு வலுவான முடிவுகள். இதுதான் புதிய இந்தியா, இதுதான் மோடி கால தேசிய பாதுகாப்பு அரசியல்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















