பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும்… அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும்… அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதலமைச்சரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது தான் நமது வினா.
கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவா, ஜீவா என்ற சிறுவர்கள் அருகில் உள்ள நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறையே 5 மற்றும் 2 ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு புகழ்பெற்றிருக்கும் அவர்கள் ‘படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க…’ என்று வலியுறுத்தி வெளியிட்ட ரீல்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசி வீடியோ வெளியிட்டதுடன், கலெக்டராகவும், காவல்துறை அதிகாரியாகவும் வரும் அளவுக்கு நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லை.
முதலமைச்சரின் ஷூட்டிங் பாணியில் பேசுவதாக இருந்தால், அடுத்த ஷாட்டுக்கு கடலூர் மாவட்டம் நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்வோம்…. அந்த பள்ளியில் தான் ரீல்ஸ் புகழ் மாணவர்கள் தேவாவும், ஜீவாவும் படிக்கிறார்கள்.
நெல்லித்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மொத்தம் 5 வகுப்புகள் உள்ளன. 30 மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
இரு ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? எப்படி தரமான கல்வி வழங்க முடியும்? தேவாவும், ஜீவாவும் எப்படி கலெக்டராகவும், காவல் அதிகாரியாகவும் ஆவதற்கு ஏற்ற அடிப்படைக் கல்வியை பெற முடியும்? சொல்லுங்க முதல்வரே.
தேவா, ஜீவா பயிலும் பள்ளியின் நிலைமை மட்டும் இவ்வளவு மோசமாக இல்லை. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு வெறும் 2 ஆசிரியர்கள் மட்டும் தான். மேலும் 3800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் தான்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 29,418 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இந்த லட்சணத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும் முதலமைச்சர் அவர்களே?
மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை; விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாதால் மாநிலம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை திசை திருப்புவதற்காகத் தான் இந்த விளம்பரப்படத்தை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இத்தகைய விளம்பரப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. இன்னும் சில வாரங்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உங்களால் மறக்க முடியாத தீர்ப்பை அளிப்பார்கள். அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து தான் நீங்கள் பொழுதைக் கழிக்க வேண்டியிருக்கும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















